விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயில்; கடைஞாயிறு விழாவில் சிம்ம குளத்தில் நீராடலாம்: 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி

வேலூர்: வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடை ஞாயிறு விழா சிறப்புமிக்கது. விழாவின்போது, கோயிலில் உள்ள சிம்ம குளத்தில் மூழ்கி எழுந்து, கோயிலில் படுத்து உறங்கினால் குழந்தை இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த விழாவில், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து, குழந்தை வரம் வேண்டி பெண்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக, மார்கபந்தீஸ்வரர் சிம்ம குளத்தில் நீராட பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. குளத்தில் இருந்து புனிதநீர் எடுத்து வந்து பெண்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை மாத கடை ஞாயிறு விழாவையொட்டி அடுத்த மாதம் 10ம் தேதி சிம்ம குளம் திறப்பு நிகழ்ச்சியும், மறுநாள் 11ம் தேதி கடை ஞாயிறு விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சிம்ம குளத்தில் நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்ேபாது, கொரோனா தொற்று விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சிம்ம குளத்தில் நீராட பெண்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது’’ என்றனர்.

Related Stories: