×

ஓடும் ஜீப்பில் வைத்து மாடல் அழகி கூட்டு பலாத்காரம்: கேரளாவில் கொடூரம்

திருவனந்தபுரம்: குடிபோதையில் மயங்கிய 19 வயது மாடல் அழகியை வீட்டில் கொண்டு விடுவதாக கூறி, ஓடும் ஜீப்பில் வைத்து 3 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நேற்று ராஜஸ்தானை சேர்ந்த மற்றொரு அழகி உள்பட 4 பேரை போலீசார் கைது ெசய்தனர்.

கேரள மாநிலம், காசர்கோட்டை சேர்ந்த 19 வயதான ஒரு இளம்பெண், கொச்சியில் தங்கி மாடல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் கொச்சி ரவிபுரத்திலுள்ள ஒரு பாருக்கு, ராஜஸ்தானை சேர்ந்த மாடல் அழகியான டிம்பிள் லாவா என்பருடன் மது அருந்துவதற்காக சென்றார்.

அளவுக்கு அதிகமாக குடித்த மாடல் அழகி பாரில் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அந்த பாரில் மது அருந்தி கொண்டிருந்த 3 வாலிபர்கள் அவரை வீட்டில் கொண்டு விடுவதாக கூறியுள்ளனர். பின்னர் தங்களுடைய ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.
ஆனால் கொச்சி நகரத்திலேயே ஜீப்பில் சுற்றிய அவர்கள், அந்த வாகனத்தில் வைத்து மாடல் அழகியை மாறி மாறி கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் காலையில் அவர் தங்கியிருக்கும் கொச்சி காக்கநாட்டிலுள்ள வீட்டில் கொண்டு விட்டுவிட்டு 3 பேரும் தப்பிச் சென்றனர். இது குறித்து அந்த மாடல் அழகி தன்னுடைய தோழி ஒருவரை போனில் அழைத்து விவரத்தை கூறினார். அவரது தோழி இது குறித்து எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அந்த மாடல் அழகியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவரை போலீசார் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக எர்ணாகுளம் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் மாடல் அழகியை பலாத்காரம் செய்தது கொடுங்கல்லூர் பகுதியைச் சேர்ந்த விவேக், சுதீப் மற்றும் நிதின் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு ராஜஸ்தான் மாடல் அழகி டிம்பிள் லாவாவும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். கொச்சியில் ஓடும் ஜீப்பில் வைத்து மாடல் அழகி கொடூரமாக கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Kerala , Model gang-raped in moving jeep: Atrocity in Kerala
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...