பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் நூற்றாண்டு நினைவுச்சின்ன வடிவில் ஆயிரம் ஊழியர்கள் நின்று சாதனை: 15 நிமிடங்களில் அசத்தல்

பரமக்குடி: பரமக்குடி சுகாதாரத்துறை சார்பில் நூற்றாண்டு நினைவுச்சின்ன வடிவில் ஆயிரம் ஊழியர்கள் 15 நிமிடங்களில் நின்று சாதனை நிகழ்த்தினர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், பொது சுகாதார மாவட்ட நூற்றாண்டு விழா நடைபெற்றது. கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் விழாவை துவக்கி வைத்து நூற்றாண்டு மலரை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, பரமக்குடி பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சாதனை நிகழ்ச்சியாக செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் என சுமார் ஆயிரம் பேர், சுகாதாரத்துறை நூற்றாண்டு விழா நினைவுச்சின்ன வடிவில், 15 நிமிடங்களில் நின்று சாதனை நிகழ்த்தினர். 80 அடி நீளம் 50 அடி அகலத்தில் 100 என்ற எண் போல ஊழியர்கள் நின்றிருந்தனர்.

இச்சாதனை ட்ரம்ப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் முதன்மை அலுவலர் தலைமையிலான குழுவினர் முன்னிலையில் நடந்தது. 15 நிமிடத்தில் ஆயிரம் சுகாதாரத்துறை ஊழியர்கள், இணைந்து நடத்திய இந்த சாதனையை அங்கீகரிக்கப்பட்டு, பரமக்குடி சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரதாப் குமாரிடம் சான்றிதழ் வழங்கப்பட்டது. சாதனை புரிந்த பரமக்குடி மாவட்ட பொது சுகாதாரத்துறையினருக்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: