×

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி முதன் முறையாக அண்ணாமலையார் கோயிலில் பிரதான 4 கோபுரங்கள் தூய்மைப்படுத்தும் பணி: ராட்சத கிரேன் ெபாருத்திய தீயணைப்பு வாகனம் மூலம் நடந்தது

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உளளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் 7ம் நாளான டிசம்பர் 3ம் தேதி மகா தேரோட்டமும், 6ம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

தீபத்திருவில் பங்கேற்க கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தமுறை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, 25 லட்சம் பக்தர்கள் விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, விரிவான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது.  திருவீதியுலா வாகனங்கள் சீரமைப்பு, தேர் புதுப்பிக்கும் பணி, பக்தர்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் பிரதான கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி நேற்று கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் முன்னிலையில் நடந்தது. அதையொட்டி, முதன்முறையாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் ராட்சத கிரேன் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் மூலம், கோபுரங்கள் தூய்மைப்படுத்தும் பணி நேற்று தொடங்கியது.

அதற்காக, சென்னையில் இருந்து தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. சுமார் 54 மீட்டர் உயரம் கொண்ட கிரேன் உதவியுடன் மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் இயந்திரத்தின் உதவியுடன் கோபுரங்கள் மீது தண்ணீர் அடித்து தூய்மை செய்யப்பட்டன. இந்த பணியில் சுமார் 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த பணியை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.

அண்ணாமலையார் கோயிலின் மேற்கு கோபுரம், வடக்கு கோபுரம், தெற்கு கோபுரங்கள் நேற்று தூய்மைப்படுத்தப்பட்டன. அதன்தொடர்ச்சியாக, கோயிலின் பிரதான கோபுரமான ராஜகோபுரம் தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற உள்ளது. இந்த கோபுரத்தின் உயரம் 217 அடி என்பதும், தமிழகத்தின இரண்டாவது மிகப்பெரிய கோபுரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலையார் கோயிலில் 4 திசைகளில் பிரதான கோபுரங்களும், உட்பிரகாரங்களில் 5 கோபுரங்களும் உள்பட மொத்தம் 9 கோபுரங்கள் உள்ளன. ஆனாலும், தீயணைப்பு வாகனத்தை கோயில் பிரகாரத்துக்குள் கொண்டு செல்ல முடியாது என்பதால், பிரதான கோபுரங்களின் வெளிப்புறம் மட்டும் இந்த ராட்சத இயந்திரத்தை பயன்படுத்தி தூய்மைப்படுத்தப்படுகிறது.

Tags : Karthika Deepatri festival ,Annamalaiyar , Karthikai Deepatri Vizah, Annamalaiyar Temple, Main 4 towers cleaning work
× RELATED சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவு...