×

நவம்பர் 19 (இன்று) உலக கழிவறை தினம்

மனிதனின் அடிப்படை தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறைவிடம். அடுத்தபடியாக இருப்பது சுகாதாரம். அந்த அளவுக்கான முக்கியத்துவத்தை அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்கு ஏனோ பலரும் அளிப்பதில்லை. சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கழிப்பறைகளின் தேவை, அவசியத்தை உணர்ந்து சிங்கப்பூரில் ஜாக் சிம் என்பவரால் கடந்த 2001-ம் ஆண்டு முதல்முறையாக நவ.19-ம் தேதி உலக கழிப்பறை கழகம் தொடங்கப்பட்டது. 2013 ஜூலையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 19ம் நாளை ஐக்கிய நாடுகளின் சிறப்பு நாளாகக் கொண்டாடுவதெனத் தீர்மானித்தது. இதற்கான முன்மொழிவை சிங்கப்பூர் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்து அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

2013 முதல் நவ.19-ம் தேதியை உலக கழிப்பறை தினமாக ஐ.நா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும், அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் மற்றும் வேறு அமைப்புகளின் அறிக்கைகளின் படி உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் அடிப்படை கழிவறை வசதிகளற்று வாழ்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி 131 மில்லியன் குடும்பங்களில் கழிவறை வசதி இல்லை எனவும் அவர்களில் எட்டு மில்லியன் குடும்பத்தினர் பொதுக் கழிவறையையும் 123 மில்லியன் குடும்பங்கள் வெளியிடங்களையும் கழிவறைகளாகப் பயன்படுத்துகிறார்கள்.

கழிப்பறை குறித்து பேசத் தயங்கிய நிலை மாறி தற்போது விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் சுகாதாரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, நம் வீட்டை மட்டுமல்லாமல், நமது சுற்றுப்புறத்தையும் தூய்மையாக, சுகாதாரமாக வைத்துக் கொள்வோம். இந்த உலக கழிப்பறை தினத்தில் அதற்காக உறுதி ஏற்போம். சுகாதாரக் கழிப்பிடத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டு முழு சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது.

இதில், கழிப்பறைகள் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, பள்ளிச் சுகாதாரக் கல்வி போன்ற அம்சங்கள் இடம்பெற்றன. அதன்பின், திறந்வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்கவும். சாலைகளையும், பொது இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். உலகில் 420 கோடி மக்கள், அதாவது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் கழிப்பறை வசதி இல்லாத அல்லது பாதுகாப்பற்ற கழிப்பறையுடன் இருக்கின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மேலும், 67 கோடியே 30 லட்சம் மக்கள் மலம் கழிக்க திறந்தவெளியை பயன்படுத்துவதாகவும், இதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் காரணமாக ஆண்டுக்கு 4.32 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் கூறுகின்றனர். இதில், குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது பல்வேறு கட்ட ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏராளமான நோய்கள் பரவக் காரணமாக உள்ளது. இதைத் தடுக்கும் நோக்கத்துடன் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டித் தரும் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி ஒரு வீட்டில் கழிப்பறை கட்ட ரூ.12,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதில் ரூ.7,200-ஐ மத்திய அரசும், ரூ.4,800-ஐ மாநில அரசும் வழங்குகின்றன. 2030-க்குள் பாதுகாப்பான கழிவறை பயன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை.

Tags : World Toilet Day , World Toilet Day
× RELATED உலக கழிப்பறை தினம்