×

வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 4வது நாளாக திரண்ட இளைஞர்கள்: சான்றிதழ் இல்லாமல் பலர் ஏமாற்றம்

வேலூர்: காட்பாடியில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் சான்றிதழ்கள் இல்லாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடந்த 15ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது.

இதில் அக்னிவீர்(ஆண்), அக்னிவீர் (பெண் ராணுவ காவல் பணி) சிப்பாய் தொழில்நுட்பம் உதவி செவிலியர், உதவி செவிலியர்(கால்நடை) மற்றும் ஜேசிஓ (மத போதகர்) போன்ற பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். தினந்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆட்சேர்ப்பு நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானம் அருகே இரவு நேரங்களில் வர தொடங்கி விடுகின்றனர். நாளாவது நாளாக நேற்று ராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்கு நேற்று முன்தினம் இரவே ஏராளமானோர் வந்திருந்தனர்.

நள்ளிரவு 12 மணி முதல் ஆட்சேர்ப்பு பணி தொடங்கியது. முதலில் உயரம் அளவீடு செய்யப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து ஓட்டம் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் போதிய சான்றிதழ்கள் இல்லாமல் வருவதால் அவர்கள் முதற்கட்ட தேர்வில் வெளியேறி ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர்.

இதுகுறித்து இளைஞர்கள் கூறுகையில்:
ராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்கு வரும்போது தான் பல்வேறு சான்றிதழ்களை இங்குள்ள அதிகாரிகள் கேட்கின்றனர். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது தெரிவித்த சான்றிதழ்களை தவிர்த்து வேற சான்றிதழ்களும் கேட்கிறார்கள். எங்களுக்கு தேவையான விவரங்கள் குறித்து முறையான தகவல் தெரிவிக்காமல் இருந்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்டும் தகுதியான அனைவரும் பயன்பெற முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. இதனால் ஆர்வமுடன் வருபவர்களுக்கு கடும் மனவருத்தம் ஏற்படுகிறது’ என்றனர்.

Tags : Vellore district , Vellore District Sports Ground, Army Recruitment Camp, Youth,
× RELATED திருப்பத்தூரில் காலாவதியான குளிர்பானங்கள் விற்ற கடைகளுக்கு அபராதம்