×

தேனி அருகே வீட்டில் சிறுத்தை தோல் பதுக்கிய குடும்பத்தினர் தலைமறைவு: அதிமுக எம்பி தோட்ட பிரச்னையில் தொடர்பா?

தேனி: தேனி அருகே வீட்டில் சிறுத்தை தோலை பதுக்கிய குடும்பத்தினர் தலைமறைவாகி உள்ளனர். இவ்விவகாரத்தில் தேனி அதிமுக எம்பி தோட்டத்தில் சிறுத்தை மர்மமாக இறந்ததற்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி வடபுதுப்பட்டி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (37). இவரது வீட்டில் சிறுத்தை தோல் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, உதவி வன பாதுகாவலர் ஷர்மிலி தலைமையில் வனச்சரகர் செந்தில்குமார், வனவர் ஆனந்தபிரபு ஆகியோர் துரைப்பாண்டியின் வீட்டிற்கு சென்று நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இதில் அங்கு மாடியில் வைக்கப்பட்டிருந்த சிறுத்தையின் தோல் ஒன்றை கைப்பற்றினர். வனத்துறையினர் வந்ததையறிந்த துரைப்பாண்டி தலைமறைவானார்.

இவரது மனைவி வேல்மணி கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஒன்றிய கவுன்சிலராக சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர். துரைப்பாண்டி மற்றும் இவருடன் சிலர் சேர்ந்து வேட்டையாடுவது வழக்கமாக கொண்டிருந்ததாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, நேற்று துரைப்பாண்டியின் வீட்டினர் அனைவரும் தலைமறைவாகி விட்டனர். எப்போது வேட்டையாடப்பட்ட சிறுத்தை மூலமாக தோல் கிடைத்தது? இந்த வேட்டையில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கோம்பைக்காடு வனப்பகுதியில் தேனி எம்பியும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த செப். 28ம் தேதி சிறுத்தை ஒன்று சோலார் மின்வேலியில் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. மாவட்டத்தில் தற்போது சிறுத்தை தோல் சிக்கியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே, ரவீந்திரநாத் எம்.பி தோட்டத்தில் சிறுத்தை மர்மச்சாவு விவகாரத்தில் துரைப்பாண்டிக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணையை திருப்பி உள்ளனர்.

Tags : Theni ,AIADMK , Theni, family hiding leopard skin at home, AIADMK MP
× RELATED தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்