×

திருச்செந்தூர் வழித்தடத்தில் 4 ரயில் நிலைய நடைமேடைகளை நீட்டிக்க திட்டம்: நெல்லை - செங்கோட்டை வழித்தடத்திற்கு ‘பெப்பே’

நெல்லை: நெல்லையில் இருந்து திருச்செந்தூர் மார்க்கத்திலும், நெல்லையில் இருந்து செங்கோட்டை மார்க்கத்திலும் காணப்படும் ரயில் நிலையங்களில் போதிய பிளாட்பார்ம் வசதிகள் இல்லை என்ற குறைபாடுகள் நிலவுகின்றன. எக்ஸ்பிரஸ் நிறுத்தப்படும்போது பிளாட்பார்மிற்கு வெளியேயும் பெட்டிகள் இருப்பது பயணிகளுக்கு சிரமமாக உள்ளது. திருச்செந்தூர் - நெல்லை - செங்கோட்டை ரயில் வழித்தடங்களின் நடைமேடைகளின் எண்ணிக்கை மற்றும் நீளம் குறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் உரிமை சட்டத்தில் சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் அளித்த பதிலில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி செங்கோட்டை ரயில் நிலையத்தில் 580மீ  கொண்ட 4 நடைமேடைகளும், 690மீ கொண்ட ஸ்டேபிளிங் லைன்1, 102 மீ கொண்ட ஒரு விஐபி லைன் உள்ளது. தென்காசியில் 540மீ கொண்ட 3 நடைமேடைகள், 507மீ கொண்ட ஒரு நடைமேடை உள்ளது. கீழப்புலியூர், மேட்டூர், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கீழஆம்பூர், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், பேட்டை, நெல்லை டவுன், குரும்பூர், காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் 405மீ நீளம் கொண்ட ஒற்றை நடைமேடை மட்டுமே உள்ளது.

பாவூர்சத்திரம், கீழக்கடையம், சேரன்மகாதேவி, செய்துங்கநல்லூர், திருவைகுண்டம், நாசரேத் ஆகியவற்றில் 405மீ நீளம் கொண்ட இரு நடைமேடைகள் உள்ளன. அம்பையில் 475மீ கொண்ட 3 நடைமேடைகள் உள்ளன. காருக்குறிச்சி, பாளையங்கோட்டை, தாதன்குளம், கச்சன்விளை ஆகியவற்றில் 270 மீ கொண்ட ஒற்றை நடைமேடை உள்ளது. நெல்லையில் அதிகபட்ச பெட்டிகள் நிறுத்தும் வகையில் 5 பயணிகள் நடைமேடைகள், 2 குட்ஸ் லைன், ஒரு விஐபி லைன், 5 ஸ்டேபிளிங் லைன் உள்ளன. ஆழ்வார்திருநகரியில் 210மீ கொண்ட ஒற்றை நடைமேடை உள்ளது. ஆறுமுகநேரியில் முறையே 555, 405மீ கொண்ட இரு பயணிகள் நடைமேடைகள், ஒரு சரக்கு ரயிலுக்கான நடைமேடை உள்ளது.

திருச்செந்தூரில் 550மீ உள்ள ஒரு நடைமேடை,  340மீ கொண்ட இருநடை மேடைகள்,  45மீ கொண்ட ஒரு விஐபி லைன் ஆகியன உள்ளன. நடைமேடைகளை நீட்டிப்பு செய்யும் கேள்விக்கான பதிலில் நெல்லை- திருச்செந்தூர் வழித்தடத்தில் பாளை., ஆழ்வார்திருநகரி, கச்சனாவிளை, தாதன்குளம் ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்கும் திட்டம் ரயில்வேயிடம் உள்ளது. ஆனால் நெல்லை- தென்காசி வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை  நீட்டிக்கும் திட்டம் எதுவும் இப்போதைக்கு இல்லை என பதில் தரப்பட்டுள்ளது.  24 ஐசிஎப் பெட்டிகள் மற்றும் 22 பெட்டிகள் கொண்ட எல்எச்பி ரயில்களை நிறுத்துவதற்கு 540மீ நீளம் கொண்ட நடைமேடைகள் தேவையாகும். நெல்லை, செங்கோட்டை, தென்காசி ஆகிய 3 ரயில் நிலையங்களில் மட்டுமே 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நடைமேடைகளின் நீளம் உள்ளது. மற்ற ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளின்  நீளத்தை அதிகரித்தால் மட்டுமே கூடுதல் ரயில் பெட்டிகள் இணைத்து இயக்க முடியும் என்பது பயணிகளின் கோரிக்கையாகும்.

இதுகுறித்து பாண்டியராஜா கூறுகையில், ‘‘நெல்லை - திருச்செந்தூர் வழித்தடத்தில் அதிகபட்சமாக செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் ஐசிஎப் 18 பெட்டிகளுடனும், நெல்லை - தென்காசி வழித்தடத்தில்  தாம்பரம், மேட்டுப்பாளையம் செல்லும் சிறப்பு ரயில்கள் முறையே 15, 16 எல்எச்பி பெட்டிகளுடனும் தற்போது இயங்கி வருகின்றன. செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் திருச்செந்தூர், நெல்லை, தென்காசி வழித்தடங்களில் உள்ள முக்கிய கிராசிங் நிலையங்களான ஆறுமுகநேரி, நாசரேத், திருவைகுண்டம், செய்துங்கநல்லூர், சேரன்மகாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் நடைமேடைகளின் நீளத்தை 540மீ வரை உடனடியாக நீட்டிக்க வேண்டும். ஏற்கனவே செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என்று தொடர்ந்து பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே உடனடியாக மக்கள் பிரதிநிதிகளும், பயணிகள் சங்கத்தினரும் தெற்கு ரயில்வேக்கு அழுத்தம் கொடுத்து திருச்செந்தூர் -நெல்லை- தென்காசி வழித்தடத்தில் நடைமேடைகளின் நீளத்தை அதிகரிக்க வலியுறுத்த வேண்டும்.’’ என்றார்.

திருச்செந்தூருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் ரயில் நிலையம் ஆன்மீக அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கந்தசஷ்டி, வைகாசி விசாகம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்களின் போது திருச்செந்தூர் முருகனை தரிசிக்க செல்வோருக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. போதிய நடைமேடைகள் இல்லை என்பதை காரணம் காட்டி அங்கு லட்சக்கணக்கானோர் திரண்டாலும் கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை. இருக்கும் நடைமேடைகளின் நீளமும் குறைவாக உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு திருச்செந்தூரின் முதல் பிளாட்பார்மில் பாசஞ்சர் ரயில் இன்ஜின் பழுதாகி நின்றது. இதனால் சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆறுமுகநேரியில் 2 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

ஏனெனில் செந்தூர் எக்ஸ்பிரசை முதலாவது பிளாட்பார்மில் மட்டுமே நிறுத்த முடியும். 2 மற்றும் 3வது நடைமேடைகளின் நீளம் குறைவு. திருச்செந்தூரில் முதல் நடைமேடை 550மீட்டரும், மற்ற இரு நடைமேடைகளும் 340மீ கொண்டவையாகும். மற்ற நடைமேடைகளின் நீளத்தையும் கூட்டினால் எக்ஸ்பிரஸ் ரயில்களை எங்கு வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். எனவே அங்கு நடைமேடைகளின் எண்ணிக்கையையும், நீளத்தையும் அதிகரிக்க தெற்கு ரயில்வே மனது வைக்க வேண்டும்.

Tags : Thiruchendur route ,Nella-Senkotta ,Pepe , Tiruchendur Route, 4 Railway Station Platform, Nellai - Sengottai Route,
× RELATED வெள்ள பாதிப்பால்...