தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

வானிலை முன்னறிவிப்பு;

* அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக வரப்பெற்றுள்ளது.

* இந்திய வானிலை ஆய்வு மையம், தனது 18-11-2022 நாளிட்ட அறிவிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் அருகில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்றும். பின்னர் இது அடுத்த மூன்று நாட்களுக்குள் மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

* இதன் காரணமாக மழைப்பொழிவு ஏற்படும் பகுதிகள் கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

19-11-2022 ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை     

20-11-2022 சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  ஓரிரு இடங்களில் கனமழை - செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்    

21-11-2022 சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை;     

    

ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை - வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள்    

    

ஓரிரு இடங்களில் கனமழை - திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள்    

22-11-2022 சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை;     

    

ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை - வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள்    

    

ஓரிரு இடங்களில் கனமழை - சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராபள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள்    

மீனவர்களுக்கான முன்னறிவிப்பு;

* 19-11-2022 அன்று  - தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40-55 கி,மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும்,      

* 20-11-2022 மற்றும் 21-11-2022 - தமிழக கடற்கரை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-55 கி,மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மேற்சொன்ன பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

* தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள காரணத்தால், கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் தலைமைச் செயலர் / வருவாய் நிருவாக ஆணையர் அவர்களது கடித எண். இ.இ,1(4)/558.2022, நாள்

18.11.2022-ன் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

* பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு 17 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

* இதர மாவட்டங்களுக்கு மொத்தம் 43 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மிக கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

* தேசிய பேரிடர் மீட்புப் படை 1149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.

* 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 5093 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.

* மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்டங்களில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு விபரம்

* இன்று காலை 8.00 மணி நிலவரப்படி செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்போது 20.13 அடி இருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திற்கு 256 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 912 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

* அதே போல, செங்குன்றம் (புழல்) ஏரியின் மொத்த கொள்ளளவு 21.20 அடி, தற்போது 18.09 அடியாக இருக்கிறது. தற்போது செங்குன்றம் ஏரிக்கு 189 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 677 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.

* நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: