×

தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் கண்மாயில் தேவையற்ற மணல் மூட்டைகளை அகற்ற வேண்டும்: 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நாசம்

தேவதானப்பட்டி: தேனி மாவட்டத்தில் போடி, கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. குறிப்பாக விவசாயிகளின் நலன்சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விவசாய திட்டம் சார்ந்த பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமலும், தற்போது கருத்தாக நடந்து வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் ஏராளமான நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாயின. அவற்றை அகற்ற அதிகாரிகள் தவறி விட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஏரிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பல இடங்கள் வருவாய் ஆவணங்களில் இல்லை. ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்தது. அதன்பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

நீர் நிலைகள் பழைய நிலைக்கு கொண்டுவரப்பட்டால்தான் வருங்கால சந்ததிகளுக்கு அவை பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன்பின் அந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, குடிமராமத்து பணிகள் நடந்து வருகிறது. தேவதானப்பட்டி அருகே பெரியகுளம் வராகநதி ஆற்றில் வரும் தண்ணீர் வடுகபட்டியில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் பிரிந்து மேல்மங்கலம் வழியாக வந்து வேட்டுவன்குளம் கண்மாய்க்கு செல்கிறது. இந்த வேட்டுவன்குளம் கண்மாய் ஜெயமங்கலத்தில் உள்ள கண்மாய் பாசனப்பரப்பு நிலங்களுக்கு இந்த தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நடப்பாண்டி பருவமழை போதிய அளவு பெய்து ஆரம்பத்திலேயே கண்மாய்கள் நிரம்பின.

வேட்டுவன்குளம் கண்மாய் உபரிநீர் வெளியேறும் இடத்தில் சிலர் மணல் மூட்டைகளை அடுக்கி அதிகளவு தண்ணீரை தேக்க முடிவு செய்தனர். இதனால் வேட்டுவன்குளம் கண்மாய் உபரிநீர் வெளியேறும் இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளனர். இதனால் கண்மாயில் அதிகளவு தண்ணீர் தேங்கி வருகிறது. இதன் விளைவாக அந்த கண்மாய்க்கு அருகே உள்ள சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய் பாசனப்பரப்பு வயல்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் தற்போது தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது.

இதனால் 50 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த நெல் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பொதுப்பணித்துறையினர், வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் இணைந்து கண்மாயில் தேக்க அளவு நீரை வைத்துக்கொண்டு, அதிகமாக உள்ள நீரை மணல் மூட்டைகளை அகற்றி வெளியேற்ற வேண்டும். மேலும் நீரில் மூழ்கிய நெல் வயல்களில் நேரடி கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு, வேளாண்மைத்துறையினர் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயி சங்கங்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீர்நிலை ஆர்வலர்கள் கூறுகையில் ‘‘தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான குளம், ஏரி, கண்மாய்கள் உள்ளன. இந்த நீர்நிலைகளில் தேங்கும் பாசனநீரை நம்பி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளன.

இந்த கண்மாய்கள் கடந்த அதிமுக ஆட்சியின்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்மாய்களை மீட்க வேண்டும் என விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் பலரும் வலியுறுத்தினர். அதேபோல பல கண்மாய்களில் முறையான குடிமராமத்து பணிகளும் நடக்கவில்லை என புகார்கள் எழுந்தன. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஓராண்டிலேயே, பொதுப்பணிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு கண்மாய்கள் மீட்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விதிமுறைகளை மீறி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கண்மாய்களை மீட்க தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட்டு ெகாண்டிருக்கிறது.

ஒவ்வொரு திட்டத்திலும், செயல்பாடுகளிலும், அதிரடி நடவடிக்கைகளிலும், இது அனைத்து தரப்பு மக்களுக்கான அரசு என்பதை மீண்டும் அழுத்தமாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. எனவே, வேட்டுவன்குளம் கண்மாயின் தேக்க அளவு நீரை வைத்துக்கொண்டு, அதிகமாக உள்ள நீரை மணல் மூட்டைகளை அகற்றி வெளியேற்ற வேண்டும்.’’ என்றனர்.

Tags : Jayamangalam ,Vedtuvankulam Kanmai ,Devadanapatti , Unnecessary sandbags in Kanmai, destruction of paddy crops,
× RELATED ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை