பயண நேரம், எரிபொருள் தேவை வெகுவாக குறையும்; ஓமலூர்-திருச்செங்கோடு இடையே ரூ.446 கோடியில் 4 வழிச்சாலை: 2 ஆண்டுகளில் முடிக்க இலக்கு

சங்ககிரி: ஓமலூர்- திருச்செங்கோடு இடையே ரூ.446கோடியில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிக்காக சங்ககிரி பகுதியில் நீர்வழிப்பாதை கால்வாய் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.  தமிழகத்தில் கடந்த 1990ம் ஆண்டுக்கு முன்பு அனைத்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளும் இரு வழிச்சாலையாக இருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்கநாற்கர 4 வழிச்சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தபின்னர், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலையும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இதன்பின்பு அனைத்து மாநிலங்களிலும் இருந்த தேசிய நெடுஞ்சாலைகமும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. பின்பு அந்தந்த மாநிலங்களில் போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய மாநில நெடுஞ்சாலைகளும் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபின்பு, விபத்துக்கள் குறைந்தது. போக்குவரத்து பாதிப்புகள் இல்லாமல் பயணதூரமும் குறைய தொடங்கியது. அந்த வகையில், சேலம் வழியாக செல்லும் சேலம்-பெங்களூர், சேலம்-கோவை, சேலம்-மதுரை, சேலம்-உளுந்தூர்பேட்டை சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டு தற்போது வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகிறது.

இந்த நிலையில் முக்கிய மாநில நெடுஞ்சாலைகள் 4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுபின்பு, மாவட்டங்களில் முக்கிய பகுதிகளை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலையாக மாற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே பவானி-மேட்டூர், மேட்டூர்-தொப்பூர் பகுதிகளில் 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாகனங்கள் தங்குதடையின்றி சென்று வருகிறது. அதேபோல் ஓமலூர்-மேச்சேரி சாலையில் ஓமலூர் முதல் மேச்சேரி வரை 14.5 கிலோமீட்டர் நீளத்திற்கு 4 வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

 தற்போது இந்த பகுதியில் வாகனங்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் சென்று வருகிறது.அதேபோல் ராசிபுரம், இடைப்பாடி உள்ளிட்ட பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலைகள் விரிவாக்கத்தால் விபத்துக்கள், பயணதூரம் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின்  மூலமாக ரோடு செக்டர் திட்டம் மூலம் திருச்செங்கோடு, சங்ககிரி,  கொங்கணாபுரம், தாரமங்கலம், ஓமலூர் வரை நான்கு வழிச்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து சேலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின்  மூலமாக ரோடு செக்டர் திட்டம் மூலம் ஓமலூர், தாரமங்கலம், சங்ககிரி, திருச்செங்கோடு வரை சாலை ரூ.446 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2021ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. மொத்தம் 51.7 கிலோமீட்டர் தொலைவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த சாலையானது 28 மீட்டரிலிருந்து 35 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இப்பணி 15 சதவீதம் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சாலையானது இரண்டு ஆண்டுக்குள் முடிக்கப்படும்,’’ என்றனர்.

இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறியதாவது:

ஓமலூர், தாரமங்கலம், சங்ககிரி, திருச்செங்கோடு 4 வழிச்சாலையாக பயன்பாட்டிற்கு வரும்போது தடையின்றி கனரக வாகனங்கள் செல்லும். நாமக்கல், சங்ககிரி பகுதியில் லாரி தொழில் மேலும் வளர்ச்சி அடையும். இதில் ஓமலூரில் இருந்து சங்ககிரி வரை இரண்டு வழிச்சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக ஓமலூர்-சங்ககிரி சாலைகள் அகலப்படுத்தும் அளவீடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையோரங்களில் தனியாரிடம் நிலம் கையகப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. தாரமங்கலம் நகர பகுதியில் புதிய சாலை செல்லாமல், புறநகர் வழியாக நிலம் கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இச்சாலை சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, கொங்கணாபுரம், சங்ககிரி வழியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள உஞ்சனை பகுதியில் மாநில நெடுஞ்சாலையை இணைக்கிறது. சாலை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில் கொங்கணாபுரம் பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் இருபுறங்களிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும்போதும் வட மாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளாவுக்கு செல்லும் வாகனங்களின் பயணத்தூரமும், எரிபொருள் தேவையும் வெகுவாக குறையும். மேலும் விபத்து, விலைமதிக்க முடியாத உயிர்சேதமும் குறையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: