×

மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்களுக்காக தங்கும் விடுதி கட்டும் பணி விறுவிறு: வணிக வளாகம் கட்டும் பணிகளும் ஜரூர்

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான மதுரை எல்லீஸ்நகர் இடத்தில் ரூ.35 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டவும், ரூ.2.08 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என தக்கார் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து தி.கண்ணன் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மீனாட்சி கோயிலின் மீனாட்சி நாயக்கர் மண்டபம் மற்றும் புதுமண்டபத்தில் இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு பக்தர்கள் அமர்ந்து உற்சவங்கள், திருவிழாக்களை கண்டுகளிக்கும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி. டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு குடமுழுக்கு செய்யும் பொருட்டு, திருப்பணிகளுக்காக, இக்கோயிலில் உள்ள அனைத்து நிலை கோபுரங்கள் மற்றும் அம்மன் சுவாமி விமானங்கள் மராமத்து செய்து வண்ணம் பூசும் பணிகளுக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. சில பணிகள் உபயதாரர் மூலம் மேற்கொள்ள, சம்மத கடிதங்கள் பெறப்பட்டுள்ளன. பல்வேறு பணிகளை மேற்கொள்ள உபயதாரர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர்.

கோயிலில் அமைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபம் திரும்ப கட்டுதல் பணிக்காக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், பட்டணம் கிராமத்தில் உள்ள, திருக்கோயிலின் பெயரில் உள்ள குவாரியிலிருந்து, 1,480 டன்கள் அளவில் 33 கற்கள் கொண்டுவரப்பட்டு, சிற்ப வேலைகளுக்காக ஸ்தபதி வசம் அவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. திருக்கோயிலுக்கு சொந்தமான மதுரை எல்லீஸ்நகர் இடத்தில் ரூ.35 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டவும், ரூ.2.08 கோடியில் வணிக வளாகம் கட்டும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

கோயிலுக்கு சொந்தமான மதுரை செல்லூர் இடத்தில் ரூ.2.37 கோடி மதிப்பிட்டில் திருமண மண்டபம் கட்டும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்கு சொந்தமான எஸ்ஆலங்குளம் பகுதியில் உள்ள இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுமான பணி ரூ.245 லட்சம் மதிப்பில் நடந்துவருகிறது. இதேபோல், மீனாட்சி கோயிலுக்கு சொந்தமான, மதுரை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையில் அமைந்துள்ள ரூ.1 கோடி மதிப்பிலான 1307 சதுரடி மனை வணிகப்பகுதி கோயில் சுவாதீனத்திற்கு கொண்டு வரப்பட்டது. மதுரை சக்குடி பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 2 ஏக்கர் நிலம் சுவாதீனம் எடுக்கப்பட்டு பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கோயில்களுக்கான மதிப்பீடுகள், முன்மொழிவுகள் அனைத்தும் நேரடியாக ஆணையர் அங்கீகாரத்திற்கு அனுப்பப்படுவதால், பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழக அரசால் துணை ஆணையர்/செயல் அலுவலர்களுக்கான மதிப்பீடு, ஒப்பந்தப்புள்ளிகள் அங்கீகாரத்திற்கான அதிகார வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதால் அனைத்துப் பணிகளும் விரைந்து நடந்து வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Meenakshi Amman Temple Building Hostel , Construction of Meenakshi Amman Temple, Hostel for Devotees, Commercial Complex,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து...