×

 சபரிமலையில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்: முன்பதிவு செய்தவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. கொரோனா கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டதால், நடை திறந்த முதல் நாளிலேயே  ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்தனர். கார்த்திகை 1ம் தேதியான நேற்று முன்தினம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். 2வது நாளாக நேற்றும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. நேற்றைய தரிசனத்திற்காக 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இது தவிர நிலக்கல், திருவனந்தபுரம், குமுளி உள்பட கேரளாவில் 13 இடங்களில் உடனடி முன்பதிவு கவுன்ட்ர்களும் திறக்கப்பட்டு உள்ளது.

இது பற்றி திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறுகையில், ‘தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு பக்தர்களுக்கு எந்த சிரமமும் இருக்காது. முன்கூட்டியே முன்பதிவு செய்ய முடியாவிட்டாலும், சபரிமலை செல்லும் வழியில் நிலக்கல் உட்பட கேரளாவில் 13 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடனடி முன்பதிவு வசதியை  பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட நேரத்திலேயே தரிசனம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. குறிப்பிட்ட நாளில் 24 மணி நேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் எவ்வளவு கூட்டம் இருந்தாலும்  ஆன்லைனில் குறிப்பிட்ட நேரத்திலேயே தரிசனம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்படும்,’ என தெரிவித்தார்.

* கைப்புத்தகம் வாபஸ்
சபரிமலையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து போலீசுக்கு வழங்கப்பட்ட கைப்புத்தகத்தில், ‘2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி சபரிமலைக்கு வரும் அனைவருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இளம்பெண்களும் சபரிமலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் பரவியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த விதிமுறைக்கு பாஜ, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, போலீசாருக்கு வழங்கப்பட்ட கைப்புத்தகத்தை கேரள காவல்துறை திரும்பப் பெற்றுள்ளது.

Tags : Sabarimala ,Darshan , 60,000 devotees visit Sabarimala in a single day: Those who have booked can have darshan at specific times.
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு