விண்வெளி துறையில் தனியார் நிறுவனம் சாதனை விக்ரம்-எஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது: இந்திய வரலாற்றில் புதிய மைல்கல்

புதுடெல்லி:  இந்திய வரலாற்றில் முதல் முறையாக, தனியார் நிறுவனம் தயாரித்த விக்ரம்-எஸ் ராக்கெட், 3 செயற்கைக்கோள்களுடன் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. உலகளவில் தனியார் நிறுவனங்கள்  விண்வெளி ஆராய்ச்சியில் போட்டிப்போட்டு வருகின்றன. அமெரிக்கா, ராஷ்யா, ஐரோப்பிய உள்ளிட்ட 6 நாடுகளில் தனியார் பங்களிப்பு உள்ளது. அந்த வகையில் 7 வது நாடாக இந்தியாவும், விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது. இதில், ஸ்கைரூட் என்ற தனியார் விண்வெளி நிறுவனம் தயாரித்த, ‘விக்ரம்-  எஸ்’ என்ற ராக்கெட், 3 செயற்கைக்கோள்களுடன் நேற்று விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. இந்திய வரலாற்றில் இது சிறப்புமிக்க தருணமாக கருதப்படுகிறது.

ஸ்கைரூட் நிறுவனம், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டது. தனது ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் விக்ரம் எஸ் ராக்கெட் மூலமாக நேற்று, 83 கிலோ எடையுள்ள 3 விதமான சிறிய செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்த செயற்கைக்கோள்கள், ஆந்திராவின் என்ஸ்பேஸ் டெக் இந்தியா, சென்னையின்  ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் கிட்ஸ், அர்மேனியா நாட்டின் பசூம்கியூ ஸ்பேஸ் ரிசர்ச் லேப்  ஆகியவற்றை சேர்ந்தவை. இந்த செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 120 கிமீ. உயரத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த ராக்கெட் திட்டத்துக்காக ஸ்கைரூட் ரூ.530 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து. ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர் சிங், இஸ்ரோ இயக்குனர் சோம்நாத், ஸ்கைரூட் இணை நிறுவனர் பவன் குமார் சந்த், நாகா பரத் டாக்கா ஆகியோர்  கூட்டாக பேட்டி அளித்தனர்.

ஜிதேந்திர சிங்; இது ஒரு புதிய தொடக்கம். இந்திய விண்வெளி பயணத்தில் திருப்புமுனை.

இஸ்ரோ தலைவர் சோம்நாத்: விக்ரம்-எஸ் ராக்கெட் வரும் காலங்களில் அதிகப்படியான செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும், பொருளாதாரத்தை மேம்படுத்த புது முயற்சிகளை எடுக்கதான் இது போன்ற தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.விரைவில், அக்னி கோன், குளோபல் ஸ்பேஸ்  நிறுவனங்களின் செயற்கைக்கோள் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

இன் ஸ்பேஸ் தலைவர் பவான் கோயங்கா; தனியார் ராக்கெட் ஏவும் திட்டம் மிகப்பெரிய மைல்கல். ஏவு வாகனம், செயற்கைக்கோள், ஏவுதளம் ஆகியவற்றை உருவாக்க ஏற்கனவே 150 தனியார்  நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன.

ஸ்கைரூட் இணை நிறுவனர் பவன் குமார் சந்த்: 2 ஆண்டுகளுக்கு முன்தான் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு இஸ்ரோ பெரிதும் உதவியாக இருந்தது. தனியார் நிறுவனங்களால் ராக்கெட்டை ஏவ முடியாது என பலர் கூறினர். ஆனால், இப்போது சாதித்து காட்டி இருக்கிறோம். அடுத்தாண்டு விக்ரம் மூலம் மற்றொரு செயற்கைக்கோள் ஏவப்படும்.

* சிறப்புமிக்க தருணம்

தனியார் ராக்கெட் வெற்றிகரமாக  ஏவப்பட்டது பற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இது இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க தருணம். ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் உருவாக்கிய விக்ரம்-எஸ் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது, தனியார் விண்வெளி துறையின் பயணத்தில் ஒரு மைல்கல்,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: