×

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை

புதுடெல்லி: நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதில் அளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்வை திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் எழுதினார். இதில் கேட்கப்பட்ட தவறான கேள்விக்கு அவர் பதில் அளிக்காமல் தவிர்த்தார். நீட் தேர்வில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 93 மதிப்பெண்கள் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 92 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் உதயகுமார், தான் விடையளிக்காமல் தவிர்த்த கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி கோரினார். இதை தேசிய தேர்வு முகமை நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு 4 கருணை மதிப்பெண்களம் வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று இது விசாரிக்கப்பட்டது.

அப்போது, தேசிய தேர்வு முகமை மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘மாணவர் எழுதிய கேள்வித்தாள் பிரிவில் மொத்தம் 15 கேள்விகள் கொடுக்கப்பட்டது. அதில் அவர் பத்துக்கு விடை எழுதியிருக்க வேண்டும். ஆனால், 2 மட்டுமே எழுதி உள்ளார். அவருக்கு எப்படி கருணை மதிப்பெண் வழங்க முடியும்? இது மற்ற மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்,’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தார்.


Tags : Madras High Court ,mercy marks ,NEET , Madras High Court orders interim stay on mercy marks in NEET
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...