தி.நகரில் பூட்டியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

சென்னை: தி.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டதால்,  பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சென்னை, தி.நகர், தியாகராய தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 2வது தளத்தில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பவர் சீனிவாசன். இவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அமெரிக்கா சென்றுள்ளனர். இதனால் வீடு பூட்டி கிடந்தது. இந்நிலையில் நேற்று காலை சீனிவாசன் வீட்டில் இருந்து கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைக்கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், தி.நகர், அசோக் நகர் பகுதியில் இருந்து இரு தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். தீ விபத்தில் வீட்டில் இருந்த கட்டில், சோபா, நாற்காலி போன்றவை தீயில் எரிந்து நாசமானது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பாண்டி பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஏசிக்கு பொருத்தப்பட்டிருந்த இன்வெட்டரில் மீன்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது தெரியவந்தது. மேலும் மின்கசிவு காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் சீனிவாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: