புழல் மத்திய சிறையில் கைதிகளின் அடிப்படை வசதிகள் குறித்து சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு

புழல்: புழல் மத்திய சிறையில், கைதிகளின் அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3பிரிவுகளில் சுமார் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் எம்எல்ஏக்கள் பூண்டி கலைவாணன், எஸ்.ஆர்.ராஜா, பண்ருட்டி வேல்முருகன், ஓசூர் பிரகாஷ், மாதவரம் சுதர்சனம் ஆகிய 6 பேர் கொண்ட குழுவினர் புழல் மத்திய சிறையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட குழுவினர், அவர்களின் தேவைகள் மற்றும் குறைகள் குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து சிறைக்குள் கைதிகள் மேற்கொண்டு வரும் ரொட்டி தயாரிப்பு பணி, செக்கு எண்ணெய் பணிகள் குறித்து சிறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து சிறைக்குள் கைதிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்வி பயிற்சி, பார்வையாளர்கள் சந்திக்கும் அறை, சிறை மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் சட்டமன்ற குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சிறைக் கண்காணிப்பாளர்கள் நிகிலா நாகேந்திரன், கிருஷ்ணராஜ் மற்றும் சிறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: