×

சென்னையில் தொடர் மழையால் சேதமடைந்த 9,035 சாலை பள்ளங்கள் சீரமைப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தொடர் மழையால் சேதமடைந்த  9,035 சாலை பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ. நீளமுள்ள 34,640 உட்புறச் சாலைகளும் மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்ததால் சென்னையின் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, குண்டும் குழியுமாக மாறின.

இதேபோல், மாநகராட்சியின் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் பிற  சேவைத் துறைகளான மின்சாரத்துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல்  மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சீரமைப்பு பணிகள் மற்றும் பருவமழை  ஆகியவற்றின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே சிறு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக சில இடங்களில் சகதியாகவும், பல இடங்களில் புழுதிக்காடாகவும் சாலைகள் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும், பல சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. சாலை பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.

எனவே, சென்னையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சாலை பள்ளங்களை சீரமைக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் தொடர்புடைய உதவிப் பொறியாளர் இரவு நேரங்களில் சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு ஏற்பட்டுள்ள பள்ளங்களை கணக்கீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 2,646 சாலைகளில் 1,07,165 சதுர மீட்டர் பரப்பளவில் 10,553 பள்ளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  இந்த பள்ளங்களை சீர்செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி, கடந்த 17ம் தேதி வரை 79,305 சதுர மீட்டர் பரப்பளவில் 9,035 சாலை பள்ளங்கள் சீர்செய்யப்பட்டுள்ளன.  இதில் 4,696 பள்ளங்களை சீர்செய்ய 44,262 சதுர மீட்டர் பரப்பளவிற்கு ஜல்லிக் கலவையும், 535 பள்ளங்களை சீர்செய்ய 9,222 சதுர மீட்டர் பரப்பளவிற்கு தார்க்கலவையும், 368 பள்ளங்களை சீர்செய்ய 2,369 சதுர மீட்டர் பரப்பளவிற்கு குளிர் தார்க்கலவையும், 3,436 பள்ளங்களை சீர்செய்ய 23,451 சதுர மீட்டர் பரப்பளவிற்கு கான்கிரீட் கலவையும், பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சியால் பராமரிக்கப்படும் பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் பாதசாரிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு பணியானது இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மீதமுள்ள சாலைகளிலும் உள்ள பள்ளங்களை சீர்செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாநகராட்சியால் பராமரிக்கப்படும்  பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலைகளில் பாதசாரிகளுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் சாலைப் பள்ளங்கள் சீரமைப்பு  பணியானது இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.

* மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சியுடன் கைகோர்த்த ஐஐடி
மழைக்காலங்களில் சென்னையில் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும், வெள்ளம் ஏற்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அதனை சரிசெய்யவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம், சென்னை ஐ.ஐ.டி.யுடன் கைகோர்த்து இருக்கிறது. இதற்காக சென்னை ஐ.ஐ.டி. https://chennaiwaterlogging.org/ என்ற இணையதளத்தை உருவாக்கி இருக்கிறது. மழைகாலங்களில் தேங்கும் மழைநீர் குறித்த புகைப்படத்தையும், எவ்வளவு நீர் தேங்கி இருக்கிறது என்பது குறித்த அளவையும் பொதுமக்கள் இதில் தெரிவிக்க அறிவுறுத்தி இருக்கின்றனர். அவ்வாறு அதில் பதிவு செய்யப்படும் தரவுகளை கொண்டு வருங்காலத்தில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதையும், மழையால் தண்ணீர் தேங்குவதை தவிரிக்கவும் முடியும் என்று ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக சென்னை மாநகராட்சியின் பொதுப்பணித்துறைக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் சென்னை ஐ.ஐ.டி. செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்போது பெறப்படும் தரவுகளை கொண்டு மழைப்பொழிவு வருவதற்கு 48 மணி நேரம் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பே தேவையான முன்னெச்சரிக்கைகளையும் கொடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

Tags : Chennai , Repair of 9,035 road potholes damaged by incessant rains in Chennai: Corporation Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...