டோர் டெலிவரி முறை தொடர்ந்தால் தமிழகத்தில் வியாபாரிகளே இருக்க முடியாது: விக்கிரமராஜா வேதனை

சென்னை: தமிழகத்தில் டோர் டெலிவரி முறை தொடர்ந்து கொண்டே இருந்தால் வியாபாரிகளே இருக்க முடியாது என விக்கிரமராஜா வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இதில் வணிகர் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது: கொரோனா காலகட்டத்திற்கு சென்று இப்பொழுதுதான் வியாபாரிகள் சற்று வளர்ச்சி காண்கிறார்கள். டெஸ்ட் பர்ச்சேஸ் என்ற பெயரால் வணிகவரித் துறை அதிகாரிகள் அதிகமாக அபராதத்தை விதித்து வருகின்றனர்.

தமிழக அரசு இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கிரிப்டோ கரன்சி பயன்படுத்தும் முறையை வணிகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் விளைபொருள் கொள்முதலில் இ-நாம் முறையை ஒன்றிய, மாநில அரசுகள் அமல்படுத்தும் முறையை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் மொத்த கொள்முதல் செய்யும் வணிகர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கார்ப்பரேட் வணிகத்தை மட்டுமே ஊக்குவிக்கும் முறையை அரசு செயல்படுத்தி வருகிறது. டோர் டெலிவரி முறை தமிழ்நாட்டில் தொடர்ந்து கொண்டே இருந்தால் வியாபாரிகளே இருக்க முடியாது. மின் கட்டண அளவீடு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை செலுத்துவதை மாதாந்திர அடிப்படையில் மின் கட்டணம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வரக்கூடிய வாரத்தில் முதலமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். இவ்வாறு பேசினார்.

Related Stories: