×

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப கல்வி திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு

சென்னை: அமெரிக்காவில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் தொழில்நுட்பக் கல்வித் திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பக் கல்வி மற்றும் கற்றலுக்கு துணைநிற்றல் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை மதிப்பீடு செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான குழுவினரை தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் சிசில் சுந்தர், பொதுமேலாளர் (சேவைகள்) ஜெய் நடராஜன், TEALS திட்டத்தின் தலைவர் பீட்டர் ஜூபே, நிறுவனத்தின் கள தலைமை ஆண்ட்ரியா ரூசோ வரவேற்றனர்.

தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புகழ்பெற்ற பாஸ்டன் நகரில் உள்ள கேம்பிரிட்ஜ் ரிண்ட்ஜ்- லத்தீன் பப்ளிக் பள்ளி வகுப்பறைகளை பார்வையிட்டு அடுத்த தலைமுறை மாணவர்களை உருவாக்கும் ரோபோட்டிக் கலை, செயற்கை நுண்ணறிவு, கணினி எழுத்தறிவு கலைத்திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். மைக்ரோ சாப்ட் குழுவினர் மற்றும் தொழில் நுட்பத் தொழிலகங்களின் பிரதிநிதிகள், மைக்ரோசாப்ட் TEALS திட்டத்தின் வாயிலான தொழில்நுட்ப கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் அமெரிக்க உயர்நிலைப் பள்ளி மாணவர்களை கல்லூரி கல்விக்கு தயார் செய்தல் குறித்து விவரித்தனர்.

மைக்ரோ சாப்ட் தொழில்நுட்ப மையத்தில் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் பல்வேறு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களையும் பங்கேற்பு நிறுவனத்தினரையும் சந்தித்து தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கான பாடத்திட்டம் குறித்து விரிவாக விவாதித்தார். இது, ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திர வழிக் கற்றல் ஆகியவற்றில் நவீனப் பயிற்சி உள்ளிட்ட தொழில்நுட்ப திறன்களுடன் கூடிய பாடத்திட்டம் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்துடன் நிலைத்த ஆக்கப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. இந்த கருத்துரு பள்ளிக்கல்வி துறையால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில் பயன்பெறும் மாணவர்களுக்கு மைக்ரோ சாப்ட் நிறுவனம் சான்றிதழ்கள் வழங்க முன்வர வேண்டும் எனவும், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்வை மாற்றியமைக்கக் கூடிய, உலகளாவிய கல்வி மற்றும் திறன்கள் மூலமாக ஒவ்வொரு குழந்தையும் தம் கனவுகளை அடைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சிசில் சுந்தர் மற்றும் ஜெய் நடராஜன் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் TEALS திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தர நிர்ணயம் வழங்கிட, பரவலாக உள்ள மைக்ரோ சாப்ட் நிறுவனங்கள் நெருக்கடி இல்லாமல் செயல்படுவதற்கான வெளியையும் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்கேற்பின் தேவையையும் தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும். திறன் பெறுவதன் வாயிலாக உலகளாவிய டிஜிட்டல் பொருளாதாரத்தின் மூலம் தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்நிலையை அடைய வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத்திட்டம் கிராமப்புறக் குழந்தைகளை மேம்படுத்தும் உண்மையான திராவிடமாடல் ஆகும்’’ என்றனர்.

Tags : Microsoft ,Minister ,Anbil Mahesh Poiyamozhi , Microsoft's Technology Education Programme: Minister Anbil Mahesh Poiyamozhi's in person inspection
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்