×

மியான்மர், கம்போடியா, தான்சானியாவில் சிக்கித் தவித்த 22 தமிழர்கள் மீட்பு: தமிழக அரசு துரித நடவடிக்கை

சென்னை: மியான்மர், கம்போடியா, தான்சானியா நாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 22 பேர் மீட்கப்பட்டு சென்னை திரும்பினர். தமிழகத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் தாய்லாந்து நாட்டிற்கு தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக, போலி ஏஜென்ட்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டு, மியான்மர், தான்சானியா நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு  சட்டவிரோதமான பணிகள் செய்ய சொல்லி துன்புறுத்துவதாகவும், அங்கு சிக்கித்தவிப்பவர்களை மீட்கவேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய தூதரக உதவியுடன், தமிழக அரசின் அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை மூலமாக கடந்த மாதம் மியான்மரில் இருந்து 26 பேர் மீட்டு அழைத்து வரப்பட்டனர். அதன்பின்பு இரண்டாம் கட்டமாக மேலும் சிலர் அழைத்து வரப்பட்டனர்.  இந்நிலையில், 3ம் கட்டமாக சென்னை, ராமநாதபுரம், கடலூர், அரியலூர், திருவள்ளூர், தர்மபுரி, திருவாரூர், கோவை, காஞ்சிபுரம், விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 22 பேர் மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு, தாய்லாந்து வழியாக ஐதராபாத், மும்பை விமானங்களில் நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனர். அவர்களை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் தமிழக அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து போலி ஏஜென்ட்களின் ஆசைவார்த்தைகளை நம்பி கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு சென்ற இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்பட வற்புறுத்தியதால் தவித்தனர். அந்த தகவல் பெற்றோர் மூலமாக தமிழக அரசுக்கு வந்தது. முதல்வர் உத்தரவின்பேரில் மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.  மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து இதுவரை 64 பேரை மீட்டு வந்திருக்கிறோம். மேலும் அங்குள்ளவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிநாட்டிற்கு செல்பவர்கள் அரசு துறைகளுக்கு தகவல் தெரிவிப்பதில்லை. சுற்றுலா விசாவில் சென்று விடுகின்றனர். அங்கு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள், போலி ஏஜென்ட்கள் பற்றி, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார்செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புணர்வு ஏற்பட்டதால்தான் போலி ஏஜென்ட்கள் மூலம் செல்வது குறைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

‘உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம்’
மியான்மரில் இருந்து மீட்கப்பட்டு தமிழகம் திரும்பியவர்கள் கூறுகையில், ‘‘மியான்மரில் இருந்து உயிர்பிழைத்து வந்ததே பெரியவிஷயமாக நினைக்கிறோம். எங்களுக்கு 2வது மறுபிறவியாக நினைக்கிறோம். தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்று பொய் சொல்லி அழைத்துச்சென்று, சட்ட விரோதமாக செயல்பட வைத்தனர். 17 மணி நேரம் வேலை செய்யவில்லை என்றால் தண்டனை தருவார்கள். சரியான உணவு, தூக்கம் இல்லை. சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் பணம் கேட்டார்கள். ஒரு வேளை மட்டுமே உணவு தந்து அறையில் அடைத்து வைத்தனர். பல கொடுமைகளில் சிக்கிய எங்களை காப்பாற்றிய தமிழக அரசுக்கு நன்றி.

ஏஜென்ட்களுக்கு பணம் கொடுத்துதான் சென்றோம். எங்களை சட்டத்துக்கு விரோதமாக வேலை செய்ய சொன்னார்கள். வேலை செய்ய மறுத்தால், அடித்து உதைத்து தாக்கினார்கள். அங்குள்ள இந்திய  தூதரகத்திற்கு புகார் அளித்தோம். ஆனால், ஒரு மாதமாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பிறகு தமிழ்நாடு அரசிற்கு நாங்கள் வீடியோ மூலம் புகார் அளித்தோம். அதன் பிறகுதான் மீட்டார்கள்.  தமிழக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர்.

Tags : Tamils ,Myanmar ,Cambodia ,Tanzania ,Tamil Nadu , Myanmar, Cambodia, Rescue of 22 Tamils, Tamil Nadu Govt Quick action
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!