×

அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு வழங்கல் கலைமாமணி விருதை தகுதியான நபர்களுக்கு வழங்க நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: தகுதியான கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை, வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சமுத்திரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலான எனது கலைச்சேவையை பாராட்டி கடந்த 2017ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் கலை இளமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி மற்றும் கலைமுதுமணி விருதுகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 ஆனால், கலைமாமணி விருதுக்கு வயது வரம்போ, தகுதியோ, நெறிமுறைகளோ இல்லை. 2019 முதல் 2020ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருதுகள் கடந்த 20.02.2021ல் வழங்கப்பட்டது. இதில், தகுதியில்லாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது. அப்போது வழங்கப்பட்ட சான்றிதழில் உறுப்பினர் - செயலர் மற்றும் தலைவரின் கையெழுத்து இல்லாமல் அவசர கதியில் வழங்கியுள்ளனர். எனவே, தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதை திரும்ப பெறுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, ‘‘கடந்த அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுக்கும் மேலாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படவில்லை. கடைசி நேரத்தில் மொத்தமாக வழங்கியுள்ளனர். அதில் தகுதியில்லாத சிலருக்கு வழங்கியதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசின் சார்பில் முறையாகவும், தகுதியான கலைஞர்களையும் தேர்வு செய்து விருதுகள் வழங்க நடவடிக்ைக எடுத்துள்ளோம்’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘கலைமாமணி விருது எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? எவ்வாறு தேர்வு செய்யப் படுகின்றனர். உண்மையான கலையைப் பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்க வேண்டிய கலைமாமணி விருதை 2 படங்களில் நடித்தவர்களுக்கு கூட வழங்குகின்றனர்’’ என்றனர்.

பின்னர் 2021ல் வழங்கப்பட்ட கலைமாமணி விருது விபரங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கவுள்ள கலைமாமணி விருதுக்கான நடவடிக்கைகள் குறித்தும், கலைப்பண்பாட்டுத் துறை இயக்குநர், இயல்,இசை,நாடக மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்-செயலர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ. 28க்கு தள்ளி வைத்தனர்.

Tags : iCourt , AIADMK Regime, Kalaimamani Award, iCourt Branch, Government Information
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு