×

மாணவி பிரியா உயிரிழப்பு விவகாரத்தில் மருத்துவக்குழு அறிக்கை கவனக்குறைவாக செயல்பட்ட 2 டாக்டர் விரைவில் கைது?.. போலீசார் தீவிரம்

பெரம்பூர்: கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணமடைந்த விவகாரத்தில் போலீசாருக்கு மருத்துவ குழு அளித்த அறிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 2 மருத்துவர்கள் உள்பட பணியாளர்களின் கவனக்குறைவினால் மட்டுமே மாணவி பிரியா மரணமடைந்திருப்பது உறுதியானது. எனவே, விரைவில் மருத்துவர்களை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எம் கார்டன் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரவி- உஷா தம்பதியரின் மகள் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா (17). இவர், சென்னை ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். முழங்காலில் வலி ஏற்பட்டதால் கடந்த அக்டோபர் 28ம்தேதி பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் மருத்துவர்கள் சோமசுந்தரம், பால் ராம்சங்கர் ஆகியோர் மூலம் பிரியாவுக்கு மூட்டு ஜவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்கு பிறகு பிரியாவின் உடல்நிலை மோசமடைந்தது. கடந்த 8ம் தேதி சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். காலில் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் முழங்கால் பகுதி வரை அகற்றப்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த பிரியாவின் உடல்நிலை கடந்த 14ம் தேதி கவலைக்கிடமானது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடந்த 15ம் தேதி காலையில் பிரியா உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை மருத்துவர்களான சோமசுந்தரம், பால் ராம் சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடத்த மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து பிரியா மரணம் தொடர்பாக 6 வாரங்களில் விரிவான விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டது.

இதற்கிடையே பெரவள்ளூர் காவல் நிலையத்தில் பிரியாவின் தந்தை ரவி அளித்த புகாரின் பேரில், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
பிரியாவின் மரணம் தொடர்பாக 12 விதமான கேள்விகளை கேட்டு மருத்துவ கல்வி இயக்குனரகத்துக்கு பெரவள்ளூர் காவல்துறையினர் கடிதம் அனுப்பினர். இதையடுத்து, அதற்கான அறிக்கையை நேற்று முன்தினம் மருத்துவ கல்வி இயக்குனரகம் போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம், மயக்க மருந்து செலுத்திய மருத்துவர், மருத்துவ அதிகாரி (அறுவை சிகிச்சை நடந்தபோது இருந்தவர்), எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், வார்டு பணியாளர் ஆகியோரது கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கவனக்குறைவாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போலீஸ் தரப்பில், எழும்பூர் நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்று 2 மருத்துவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை பெறாவிட்டால் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. மேலும், அவர்கள் தலைமறைவாகி விட்டதால், பணியிடை நீக்கம் சம்பந்தமான நகல்களை அவர்களது வீட்டின் வெளியே சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேட்டியளிக்கையில், ‘‘கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா உயிரிழப்பு தொடர்பான மருத்துவ அறிக்கை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில் 5 பேர் கவனக்குறைவாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கவனக்குறைவுக்கு காரணமாக, அலட்சியமாக இருந்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு அரசு ஒத்துழைப்பு வழங்கும்’’ என்றார்.

Tags : Priya , Death of student Priya, medical board report, 2 doctors arrested soon?, police are serious
× RELATED மகனுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி; நீதிமன்றத்தில் தாய் தற்கொலை