×

சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம்

சென்னை: சென்னை பல்கலைக்கழக வினாத்தாள் குளறுபடியில், விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் நேற்று 2ம் ஆண்டு மாணவர்களுக்கான 3வது செமஸ்டர் தமிழ் பாட தேர்வு நடந்தது. வினாத்தாளை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 3வது செமஸ்டர் தமிழ் வினாத்தாளுக்கு பதில் கடந்த ஆண்டு நடந்த 4வது செமஸ்டர் வினாத்தாள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.


இதையடுத்து நேற்று நடைபெற இருந்த தமிழ் பாட தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மாலை நடைபெற இருந்த 4வது செமஸ்டர் தமிழ் அரியர் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக வும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்தது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக தேர்வு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தமிழ் தேர்வில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட வினாத்தாளை இன்றைய (நேற்று) தேர்வுக்கு வழங்கி உள்ளனர். இது தெரியவந்ததும் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கான தேர்வு உரிய முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முன்னதாக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் பொன்முடி முன்னிலையில் கையெழுத்தானது.

குளறுபடியிலும் தேர்வு எழுதிய மாணவர்கள்
திருவொற்றியூர் பூந்தோட்ட தெருவில் சென்னை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் உறுப்பு கல்லூரி உள்ளது. இங்கு பயிலும் பிஏ தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் நேற்று செமஸ்டர் தேர்வு எழுத வந்தனர். அவர்களுக்கு வகுப்பு ஆசிரியர் தேர்வுக்கான கேள்வித்தாளை வழங்கினார். அதை பெற்ற மாணவர்கள் சுமார் 2 மணி நேரம் தேர்வு எழுதிய நிலையில், கேள்வித்தாளில் கேட்கப்பட்ட வினாக்களில் குளறுபடி இருந்ததை அறிந்து, ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

அவர்கள் கேள்வித்தாளை சோதித்தபோது பிஏ தமிழ் காப்பிய இலக்கிய தேர்வுக்கான கேள்வித்தாள் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகத்தினர் சென்னை பல்கலைக்கழக தலைமைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, ஏற்கனவே கேள்வித்தாள் மாறியிருப்பதும் சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் 165 கல்லூரிகளுக்கும் கேள்வித்தாள் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பிறகு மாணவர்களிடம் இருந்து கேள்வித்தாள் திரும்ப பெறப்பட்டது. இந்த தேர்வு வேறொரு நாளில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், மாணவ, மாணவிகள் தேர்வை பாதியிலேயே நிறுத்தி விட்டு வீட்டுக்கு திரும்பினர்.

குரூப் 1 தேர்வால் செமஸ்டர் தேர்வு ரத்து
சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில்  கேள்வித்தாள் குளறுபடியால், நேற்று நடைபெற இருந்த இரண்டாம் ஆண்டு  மாணவர்களுக்கான 2வது செமஸ்டர் தமிழ் பாட தேர்வு ரத்து செய்யப்பட்டது.  இந்நிலையில், குரூப் 1 தேர்வு காரணமாக, இன்று நடைபெற இருந்த சென்னை  பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்படுவதாகவும், அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலை துணைவேந்தர் கவுரி தெரிவித்துள்ளார்.

Tags : Chennai University ,Minister , Chennai University Question Paper Glitch, Minister Ponmudi Scheme,
× RELATED மக்களவை தேர்தல் தொகுதிப் பங்கீடு...