துவங்கியது சீசன்; பழநியில் தேவஸ்தான விடுதிகளை திறக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை

பழநி: சீசன் துவங்கி உள்ளதால், பழநியில் பூட்டி கிடக்கும் தேவஸ்தான தங்கும் விடுதிகளை திறக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி  தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு நவம்பர் மாதம் துவங்கி மே மாதம்  வரை 6 மாதங்களுக்கு ஐயப்ப பக்தர்கள் சீசன், தைப்பூசம் பங்குனி உத்திரம்  மற்றும் கோடை விடுமுறை என பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.  இவ்வாறு வரும் பக்தர்களில் பலர் குழுக்களாகவே பழநி வருவது வழக்கம்.  பக்தர்கள் தங்குவதற்காக பழநி அடிவாரத்தில் தண்டபாணி நிலையம்,  சிறுகுடில்கள், சின்னக்குமாரர் விடுதி உள்ளிட்டவை கோயில் நிர்வாகம்  சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு பக்தர்களுக்கு குறைந்த  கட்டணத்தில் அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது.

மேலும் பல்வேறு தனியார் பாரம்பரிய லாட்ஜ்களிலும் பக்தர்களுக்கு நியாயமான விலையில் வாடகைக்கு அறைகள்  விடுகின்றன. இதற்கிடையே பக்தர்கள் கூட்டத்தில் காசு பார்க்க  நினைக்கும் பலர், தங்களது வீடுகளை விடுதிகளாக மாற்றி விட்டனர். இங்கு எவ்வித  அடிப்படை வசதிகளுமின்றி, அதிக கட்டணத்தில் வாடகைக்கு அறைகள் வழங்கப்பட்டு  வருகின்றன. பக்தர்களை இதுபோன்று பணம் வசூலிக்கும் கும்பல்களிடமிருந்த  காப்பாற்றும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் பல கோடி ரூபாய்  மதிப்பீட்டில் கிழக்கு கிரிவீதியில் சுற்றுலா பஸ் நிலையம் அருகிலும்,  தெற்கு கிரிவீதியில் நாதஸ்வர பள்ளிக்கட்டிட வளாகத்திலும், மேற்கு  கிரிவீதியில் வின்ச் நிலையம் எதிரிலும் பக்தர்கள் தங்குவதற்காக அறைகளும்,  குழுக்களாக தங்கும் வகையில் பெரிய அளவிலான ஹால்களும் கட்டப்பட்டுள்ளன.

இந்த ஹால்கள் தற்போது பூட்டி வைக்கப்பட்டுள்ளன. சீசன் துவங்க உள்ள  நிலையில், பூட்டி வைக்கப்பட்டுள்ள ஹால்களை உடனடியாக திறந்து விட  வேண்டுமென்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இந்து தமிழர் கட்சியின் நிர்வாகி ராம.ரவிக்குமார் கூறுகையில், ‘‘கோயில் நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள ஹால்களில் பல ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பக்தர்கள் தங்கலாம். இது பக்தர்கள் இலவசமாக தங்குவதற்காக  கட்டப்பட்டுள்ளது. ஆனால், தற்போது பூட்டி வைக்கப்பட்டுள்ளது. சீசன் துவங்கியுள்ள நிலையில் இந்த தங்கும் மண்டபங்களை திறந்து வைத்தால் பக்தர்களுக்கு  வசதியாக இருக்கும். பூட்டி வைத்திருப்பதால் தங்கும் மண்டபங்களை  கட்டியதற்கான பலன் இல்லாமல் போய்விடும். எனவே 24 மணி நேரமும் திறந்து  வைத்திருக்க வேண்டும். அங்குள்ள கழிவறைகளை நன்கு பராமரிக்க  வேண்டும். கோயில் நிர்வாகம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’என்றார்.

Related Stories: