வருமான வரித்துறையின் மூலம் திருக்கோயில்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான வரிவிலக்குகள் மற்றும் காலாண்டு அறிக்கைகள் சமர்ப்பித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறையின் மூலம் இன்று (18.11.2022) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், திருக்கோயில்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான வரிவிலக்குகள் மற்றும் காலாண்டு அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ. குமரகுருபரன் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வருமான வரி முதன்மைச் ஆணையர் திரு.எம்.இரத்தினசாமி I.R.S. அவர்கள் விளக்கவுரையாற்றுகையில், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம்  அனைத்திற்கும் மையமே நம் திருக்கோயில்கள் தான் என்று கூறினார்.

பல கிராமங்கள், நகரங்களின் பண்பாட்டு மையமாக கோயில்கள் திகழ்கின்றன. நமது சமுதாயத்தின் முக்கிய அங்கமாக திகழும் திருக்கோயில்களை நிர்வகிக்கும் அலுவலர்களாகிய உங்களை சந்திப்பதில் பெரும்மகிழ்ச்சி அடைகிறோம். இன்றைய தினம் சமுதாயத்திலும், வருமான வரித்துறையிலுடம் பல்வேறு மாற்றங்கள் நடந்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறையிலும், திருக்கோயில் நிர்வாகத்திலும் வெளிப்படையான செயல்பாடுகள் நடைபெற்று வருவதையும் அறிந்தோம். இது நமது இரண்டு துறைகளுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திலும் மாற்றம் ஏற்பட வெளிப்படை தன்மை அவசியமாகும்.  ஒவ்வொருவரும் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்கிறோம்.

அதில் வருமான வரித்துறையின் அணுகுமுறையை மாற்றிக்கொண்டே வருகிறோம். முன்பெல்லாம் நாம் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்தவுடன் அதில் தவறுகள் அல்லது விடுதல்கள்  செய்திருந்தால் அவற்றிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் அல்லது தண்டம் ஏன் விதிக்கப்பட கூடாது என தகவல் வரும். ஆனால் கடந்த ஆண்டிலிருந்தே தனி நபர் ரிட்டனை ஆன்லைனில் தாக்கல் செய்ய நுழையும்போதே  உங்களை பற்றிய முழு விவரம், உங்கள் வருமானம், நீங்கள் எங்கெல்லாம் முதலீடு செய்திருக்கிறீர்கள் என்ற முழு விவரமும் தெரிவிக்கப்படுகிறது. இப்படி எல்லா தகவல்களையும் அரசு சேகரித்து உங்களுக்கு வழங்குகிறது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள வருமானங்களுக்கு உங்கள் அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் என குடிமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதற்கு காரணம் நமது குடிமக்களை நாம் அதிகமாக நம்ப வேண்டும் என்பதே ஆகும். நாம் அரசுத் துறையில் பணியாற்றுவதனால் விதிமுறைகளை பின்பற்றுவதில்,  சட்டதிட்டங்களை பின்பற்றுவதில், மற்றவருக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். மற்ற அலுவலகங்களில் இருப்பவர்கள் நமது துறையை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.  நாம் அதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்திட வேண்டும். தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் சுமார் 45 ஆயிரம் திருக்கோயில்கள் இருக்கின்றன. திருக்கோயில்களின் கணக்குகளை வருடத்திற்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். திருக்கோயில்களின் வருமானங்கள் அனைத்தும் வரிவிலக்குக்குரியவை தான்.

இருந்தாலும், வரிவிலக்கை முழுமையாக பெற வருமான வரி சட்டம் என்ன சொல்கிறதோ, அதன்படி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது திருக்கோயில்களுக்கும், அறகட்டளைகளுக்கும் படிவம் 10 A-ல் அறிக்கை தாக்கல் செய்வது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்வதற்கு அடிப்படையாக அறக்கட்டளைகளுக்கு தனித்தனியே பான் (PAN) எண் வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை உங்கள் கணக்குகளை தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். உங்கள் கோயிலுக்கு வருமானம் வருகிறது என்றால் அதிலிருந்து டிடிஎஸ் பிடித்து விட்டு தான் மீதம் தருவார்கள். அந்த டிடிஎஸ் ஐ எப்படி திரும்ப பெற நாம் முறையாக ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும்.

அதேபோல உங்கள் வருமானத்தை பணியாளர்களுக்கு மாத ஊதியம், திருப்பணிகள் செய்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளுக்கு செலவு செய்யும் போது அந்த வகையான பணப்பரிமாற்றத்திற்கும் டிடிஎஸ் பிடிக்கப்படும். அவ்வாறு டிடிஎஸ் பிடிக்காமல் பரிமாற்றம் செய்தால் பின்னாளில் அந்த தொகைக்கு வட்டி, தண்டம் போன்றவற்றை சேர்த்து கட்டும் படியாகிவிடும். அதற்கு விதிவிலக்கு இல்லை. நமக்கு வருமானம் உள்ளே வருவதில் டிடிஎஸ் இருந்தால் கிரெடிட் கிளைம் பண்ண வேண்டும். நாம் கொடுக்கப் போற பேமெண்ட் அமௌன்ட் வெளியே போகும்போது டிடிஎஸ் கிளைம் பண்ண வேண்டும்.

இதனை மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரிட்டன் பைல் பண்ண வேண்டும் அதற்கு முதலாவதாக டேன் (TAN) நம்பர் ஒவ்வொரு ட்ரஸ்டிக்கும் அவசியம். நமது கோயில்களில் 50 சதவீதம் கோயில்களுக்கு டேன் (TAN) நம்பர் இல்லை. அப்படி இல்லையெனில் டிடிஎஸ் ஐ கிளைம் செய்ய முடியாது. இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர்களுக்காக 5 மண்டலங்களாக பிரித்து நடத்தப்படவுள்ளது. இன்றைய தினம் சென்னையில் நடைபெறுகிறது.  இந்து சமய அறநிலையத்துறை மண்டலங்ளில் உள்ள திருக்கோயில்களில் 100 சதவீதம் டேன் (TAN) நம்பர் பெற்று டிசம்பர் 2022 மற்றும் மார்ச் 2023-க்கான காலாண்டு அறிக்கைகளை தாக்கல் செய்யும் மண்டல அலுவலரை சிறப்பித்திட வேண்டும் என அதன் ஆணையருக்கு எனது வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.

அவ்வாறு முழுமையாக காலாண்டு அறிக்கைகளை தாக்கல் செய்யும் முதல் அலுவலரை வருகின்ற ஏப்ரல் 2023-ல் பொதுவெளியில் வருமான வரித்துறை சிறப்பு செய்து விருது வழங்கும் என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறையின் மூலம் வரிவிலக்கு பெறுவதற்கான வழிமுறைகள், அதற்கான காலாண்டு தொடர் அறிக்கைகளை தயாரித்தல், அனுப்புதல் தொடர்பாக விளக்கக் காட்சி (Power Point Presentation) மூலம் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வருமான வரி ஆணையர் திரு.ரவி ராமச்சந்திரன், I.R.S., கூடுதல் ஆணையர் திரு.வி.ஜஸ்டின், I.R.S.,  இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப.,  திருமதி ந.திருமகள், திருமதி மா.கவிதா  மற்றும் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Related Stories: