சிஆர்பிஎப் வளாகத்திற்குள் புகுந்து பெண் அதிகாரியை தாக்கிய யானை; கோவை அருகே பரபரப்பு

கோவை: கோவை அருகே சிஆர்பிஎப் வளாகத்திற்குள் புகுந்து பெண் அதிகாரியை காட்டு யானை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ராதிகா மேனன் (56). இவர் கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரியில் (சிஆர்பிஎப்) அதிகாரியாக பணியாற்றுகிறார். இங்குள்ள குடியிருப்பில் அவர் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை சிஆர்பிஎப் வளாகத்திற்குள் புகுந்து ராதிகா மேனன் நடைபயிற்சி மேற்கொண்ட இடத்திற்கு வந்தது. இதை சற்றும் எதிர்பாராத அவர் பயத்தில் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை விடாமல் துரத்திய யானை திடீரென அவரை தாக்கி சாலை ஓரத்தில் தள்ளியது. சத்தம் கேட்டு ஓடி வந்த போலீசார் யானையை சிஆர்பிஎப் வளாகத்தைவிட்டு வெளியே விரட்டியடித்தனர்.

யானை தாக்கியதில் ராதிகா மேனன் காயம் அடைந்தார். அவரை மீட்டு துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து துடியலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: