நடப்பாண்டில் 50,000 தமிழக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்தும், கனமழையினை எதிர்கொவது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆலோசனை

சென்னை: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடப்பாண்டில் 50,000 தமிழக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது பற்றியும் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (18.11.2022) மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடப்பாண்டில் 50,000 தமிழக விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது பற்றியும் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் கனமழையினை எதிர்கொள்ளும் பொருட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் காணொளி காட்சி  வாயிலாக கலந்து கொண்டனர், இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் மற்றும் மின் தொடரமைப்பு ரா.மணிவண்ணன்,  இயக்குநர் மற்றும் பகிர்மானம் மா.சிவலிங்கராஜன், தலைமை அலுவலக தலைமைப் பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 11.11.2022 அன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் நடைபெற்ற விழாவில் நடப்பாண்டில் 2022-2023 தமிழ்நாடு விவசாயிகள் 50,000 பேருக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான ஆணையும் முதலமைச்சரால் வழங்கப்பட்டது.

விழாவில் அறிவித்தபடி, இந்த திட்டம் தொடங்கப்பட்ட 11.11.2022 நாள் முதல் 100 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு 50,000 விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும்.  இதற்குரிய எல்லா நடவடிக்கைகளையும் அனைத்து  மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மேற்பார்வை பொறியாளர்களும் மேற்கொள்ளுமாறு மின்சாரத் துறை அமைச்சர் உத்தரவிட்டார். மின் பகிர்மான வட்ட வாரியாக மின் இணைப்பு வழங்க வேண்டிய இலக்கு பற்றிய விபரம் வருமாறு:-

கிருஷ்ணகிரி-4969,    தருமபுரி- 4486, பல்லடம்- 2926, நாமக்கல்- 2455, தஞ்சாவூர்- 2401, கள்ளக்குறிச்சி- 2350, உடுமலைப்பேட்டை- 1985, திருச்சி மாநகரம்- 1971, புதுக்கோட்டை-1910, திண்டுக்கல்- 1798, கோபி- 1708, திருப்பத்தூர்- 1668, மேட்டூர்- 1599, பெரம்பலூர்- 1584, விழுப்புரம்-  1318, தேனி-1237, ஈரோடு- 1120, சேலம்- 1088, கோவை தெற்கு- 1046, வேலூர்- 998, திருவண்ணாமலை- 914, மதுரை- 882, காஞ்சிபுரம்- 859, திருவாரூர்- 848, சிவகங்கை- 842, கடலூர்- 744, செங்கல்பட்டு- 729, நாகப்பட்டினம்- 676, கரூர்- 551, திருப்பூர்- 497, கோவை வடக்கு-457, விருதுநகர்- 444, திருநெல்வேலி- 326, ராமநாதபுரம்- 222, தூத்துக்குடி-206, நீலகிரி- 83, சென்னை வடக்கு- 57, கோவை மாநகரம்- 26, கன்னியாகுமரி- 14, சென்னை மேற்கு- 5,    மதுரை மாநகரம்-1 மொத்தம் : பொதுப் பிரிவு : 50,000 ஆகும்.    

மேற்கண்ட அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு 100 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்ற இலக்குடன், அனைத்து பொறியாளர்களும் தமக்கான இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு அது நிறைவேற்றப்படுகிறதா என தொடர்ந்து ஆய்வுக் கூட்டம் நடத்தி அதனை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக கலந்தாய்வு கூட்டம் பிரிவு அலுவலக நிலையில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும். மின் இணைப்பு வழங்குவதற்கான தளவாடப் பொருட்கள் மற்றும் மின்மாற்றிகளை முன்கூட்டியே கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் அலுவலர்களுக்கு உத்திரவிட்டார்.

இந்த மின் இணைப்புகள் வழங்குவதற்கு அலுவலர்களோ அல்லது பணியாளர்களோ விவசாயிகளை எந்தவிதத்திலும் இடையூறு செய்யக்கூடாது எனவும், அனைத்து பணிகளும் வாரிய செலவிலேயே முடிக்கப்பட வேண்டும் என்றும், மேலும் அவ்வாறு இடையூறு செய்வதாக தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து அலுவலர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தினார்கள். வரும் 19.11.2022 முதல் எதிர்பார்க்கப்படும் கன மழையினை எதிர்கொள்வதற்கு வாரிய அலுவலர்கள் அனைவரும் உரிய தளவாட சமான்களுடன் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.  முதற்கட்டமாக கனமழை பெய்து முடித்த நிலையில், பாதிப்புகள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம்.

உயர் அழுத்த மின்பாதை  (HT line) மற்றும் தாழ்வழுத்த மின்பாதை (LT line) மட்டுமல்லாது அதிலிருந்து பிரிந்து செல்லக்கூடிய குறுக்கு மின்பாதைகள் (Spur Line) முதற்கொண்டு மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்மாற்றிகள் மற்றும் இன்சுலேட்டர்கள் பழுதடைந்திருக்கிறதா என்பதை கள ஆய்வு செய்து அதை சரிசெய்வதற்கான பணியாளர்களை கணக்கிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்பார்வை பொறியாளர்கள் உடனே எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற மழைக் காலங்களில் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க வேண்டும் எனவும், தமது அலைபேசியை எந்தக் காரணம் கொண்டும் OFF செய்து வைக்கக்கூடாது எனவும், நுகர்வோரிடமிருந்து புகார்கள் வரும் பட்சத்தில் அதை உரிய முறையில் பரிசீலிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.  

தற்சமயம், 1,77,000 மின்கம்பங்கள் இருப்பில் இருப்பதோடு, 1,37,000 மின்கம்பங்களுக்கான ஒப்பந்தப்புள்ளி முடிக்கப்பட்டு மின்கம்பங்கள் சப்ளை ஆகிக்கொண்டிருக்கின்றன. இவை தவிர 14,820 மின்மாற்றிகள் மற்றும் 12,800 கி.மீ. மின்கம்பிகளும் கையிருப்பில் உள்ளன.  மேலும் மின்சாரத் துறை அவர்கள் கூறியதாவது. ஏற்கனவே மின் பகிர்மான வட்டந்தோறும் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள் அனைவரும்  தங்களது மின் பகிர்மான வட்டத்தில் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.  

சம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்கள், ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான பணியாளர்கள், மரம் வெட்டும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள், ஜே.சி.பி., கிரேன்கள் மற்றும் தளவாட சாமான்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்குவதற்கு உரிய பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்கள் அடையாளம் காணப்பட்டிருக்க வேண்டும். மின் தடங்கல் ஏற்பட்டால் முதற்கட்டமாக மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் மின்சாரம் வழங்கப்பட வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் அந்தந்த மண்டல தலைமைப் பொறியாளர்கள் பொறுப்பேற்று கண்காணிப்பதோடு, பணிகள் முறையாகவும், வேகமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.  

இத்தகைய மழைக்காலங்களில், அனைவரும் மிகுந்த கவனத்துடனும், உடனுக்குடன் மின்சாரத்தினை பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், பொதுமக்களிடமிருந்து புகார்கள் எதுவும் வரப்பெற்றால் அதனை உதாசீனப்படுத்தாது அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் அனைத்து அலுவலர்களையும் கேட்டுக் கொண்டார். பின்னர், மின்சாரத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கன மழையை எதிர்கொள்ள கூடிய வகையிலும், மழை பெய்தாலும் எவ்வித தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்குவதற்காகவும், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், இயக்குநர்/பகிர்மானம் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் தற்போது நடந்து முடிந்திருக்கின்றன.  

குறிப்பாக, வரக்கூடிய நாட்களில் மழை அதிகமாக இருந்தாலும் கூட எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்பட வேண்டுமென்று அறிவுறுத்தப் பட்டிருக்கின்றன.  ஏற்கனவே, ஜுன் மாதம் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு பராமரிப்பு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு அதில் 44,000 பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.  இப்படி தொடர்ந்து பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு எந்தவித பாதிப்புகளும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  சென்னை உட்பட எந்த இடங்களிலும் மின் விநியோகத்தில் எந்தவித பாதிப்புகளும் இல்லை. முதலமைச்சர் திருக்கரங்களால் 50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு வழங்ககூடிய மகத்தான திட்டத்தில் 20,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு ஆணைகளை ஒரே நாளில் வழங்கி முதல்வர் தொடங்கி வைக்கப்பட்டது.  

100 நாட்களில் 50,000 விவசாயிகளுக்கான மின் இணைப்பு வழங்கக்கூடிய பணிகள் முதலமைச்சர் தொடங்கிவைக்கப்பட்டு, இணைப்பு வழங்கக்கூடிய பணிகளை விரைவாக 100 நாட்களுக்கு உள்ளாக முடிக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.  இரண்டு நோக்கங்களுக்காக இந்த ஆய்வு கூட்டம் நடந்து முடிந்திருக்கின்றன.  மின் விநியோகத்தை பொறுத்தவரைக்கும் ஊடக நண்பர்களிடமும் பொதுமக்களிடமும் நான் கேட்டுக்கொள்வது, மழையால் மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் மின்னகத்தை தொடர்பு கொண்டு எந்த இடங்களில் பாதிப்பு என்று புகார் தெரிவிக்க வேண்டும்.  அந்த புகாரின் அடிப்படையில் விரைவாக விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  இந்த மழையினால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் எங்கேயும் பாதிப்பு இல்லை.  

சீர்காழியைப் பொறுத்தவரைக்கும் முதலமைச்சர் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி இருக்கிறார்கள்.  36 மணி நேரத்திற்குள்ளாக  சீர்காழியில் பாதிக்கப்பட்ட அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டிருக்கின்றன.  அங்கு பழுதடைந்த மின் கம்பங்கள் எல்லாம் மாற்றப்பட்டிருக்கின்றன.  ஏறத்தாழ 46 மின்மாற்றிகள் வரை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டிருக்கின்றன.  மிக சிறப்பாக பணியாற்றக்கூடிய சீர்காழி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுகோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து கூடுதலாக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் அந்த பணியில் ஈடுபட்டு மிகச்சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள்.  அவர்களுக்கு என் சார்பாகவும், மின்சார வாரியத்தின் சார்பாகவும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 16 உயர் அழுத்த மின்மாற்றிகளின் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு கனமழை பெய்தும் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டதை பொதுமக்கள் மனதார பாராட்டியுள்ளனர். பத்திரிக்கையாளர்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.  மழைக்காலங்களில் அனைத்து மின் நுகர்வோர்கள் மிகவும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.  ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பேசினார். பின்னர், அமைச்சர் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தை ஆய்வு செய்தார்கள்.

Related Stories: