வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறைக்கு கடந்த ஆண்டை விட வரி வருவாய் அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறைக்கு கடந்த ஆண்டை விட வரி வருவாய் அதிகரித்துள்ள நிலையில் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. வணிகவரித்துறையில் கடந்த ஆண்டில் இதே மாதம் ரூபாய் 56,310 கோடி வருவாய் ஈட்டியிருந்த நிலையில், நடப்பாண்டில் ரூபாய் 20,529 கோடி கூடுதலாக அதாவது ரூபாய் 76,839 கோடி வரி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பதிவுத் துறையில் கடந்த ஆண்டு 17.11.2021 அன்று ரூபாய் 7,877.52 கோடி வருவாய் ஈட்டியிருந்த நிலையில் 17.11.2022 வரை ரூபாய் 2,785.65 கோடி கூடுதலாக அதாவது ரூபாய் 10,633.17 கோடி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில் இரண்டு துறைகளையும் சேர்த்து மொத்தம் ரூபாய் 23,314.65 கோடி கூடுதலாக வருவாய் ஈட்டியதை முன்னிட்டு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்பி. மூர்த்தி, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசு செயலாளர் பா. ஜோதி நிர்மலாசாமி, முதன்மைச் செயலாளர்/வணிக வரி ஆணையர் தீரஜ்குமார், பதிவுத் துறைத் தலைவர் ம.ப. சிவன் அருள், மற்றும் வணிகவரி இணை ஆணையர் (நிர்வாகம்) மா.சௌ. சங்கீதா, ஆகியோர் முதலமைச்சரை இன்று (18.11.2022) தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக வணிகவரி மற்றும் பதிவுத் துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாகவே, இவ்விரு துறைகளிலும் இதுவரை இல்லாத அளவிலான வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது. வணிகவரித் துறையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வரி செலுத்தும் வணிகர்களின் எண்ணிக்கை 5,54,153 ஆக இருந்தது. தற்போது 6,73,339 ஆக உயர்ந்துள்ளது. ஏறக்குறைய 1,19,186 வணிகர்கள் வரி வரம்புக்குள் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளனர்.

வணிகவரித் துறையில் வரித் தணிக்கைகள், கூடுதல் சுற்றும் படைகள் மூலம் சரக்கு வாகனங்களை கண்காணித்தல், சோதனை கொள்முதல் அதிகரிப்பு, போலி பட்டியல் வணிகம் தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வணிகவரித் துறை வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

பதிவுத் துறையிலும் பதிவு பணி நாட்கள் அதிகப்படுத்தியது, பதிவு நாளன்றே ஆவணங்களை திருப்பி தருவது, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பதிவில் முன்னுரிமை, பதிவுக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக பதிவு எல்லைகளை சீரமைத்தது மற்றும் புதியதாக 5 பதிவு மாவட்டங்களை உருவாக்கியது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக தொடர்ந்து வருவாய் பதிவுத் துறையிலும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 7.11.2022 அன்று புது தில்லியில் நடைபெற்ற 4th TIOL National Taxation 2022 விருது வழங்கும் விழாவில், வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை Awards மேற்கொண்டதற்காக சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு (Reformist State) தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: