×

சென்னையில் நவ.2 முதல் 15ம் தேதி வரை 2,671 கிலோ நெகிழிகள் பறிமுதல்: ரூ.12.55 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் நவ.2 முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையில் 2,671 கிலோ நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 12.55 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள் உட்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இவ்வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குப் பதிலாக வாழையிலை, பாக்குமர இலை, அலுமினியத்தாள், காகிதச் சுருள், தாமரை இலை உட்பட 12 வகையான பொருட்களைப்  பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகரை அழகுபடுத்தவும், பசுமைப் பரப்பளவை அதிகரித்து சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாநகராட்சியின் சார்பில் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப் பணியின் கீழ் நீண்ட நாள் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினைத் தவிர்க்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கவும், தொடர்ந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் நிறுவனங்களின் தொழில் உரிமத்தை ரத்து செய்யவும், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 02.11.2022 முதல் 15.11.2022 வரை 13,811 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் ஆய்வு மேற்கொண்டு 4,808  வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் 2,671 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.12,55,700/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வணிக நிறுவனங்கள், சிறு அங்காடிகள் மற்றும் பொதுமக்கள் அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதைத் தவிர்த்து, பிளாஸ்டிக் மாசில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு ஒத்துழைப்பை அளிக்கவேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.


Tags : Chennai , 2,671 kg of elastics seized in Chennai from Nov 2 to 15: Rs 12.55 lakh fine collected
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...