×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நவ. 2 முதல் 15-ம் தேதி வரை 335 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.6,70,000 அபராதம் விதிப்பு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் விடப்படுகின்ற மாடுகளின் உரிமையாளர்கள் மீது அபராதத்துடன் கூடிய நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால்  கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை  மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பிடிக்கப்பட்ட மாடுகளை இரண்டு நாட்களுக்கு பராமரிக்கும் செலவினத்துடன் அபராதத் தொகையாக ரூ.2,000 விதிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட  மாடுகளின் உரிமையாளர் இரண்டு நாட்களுக்குள் அபராதத் தொகையினை செலுத்தி மாடுகளை மீட்டுச் செல்லாத நிலையில் மூன்றாவது நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாடுகளை பராமரிக்க பராமரிப்புத் தொகையாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 02.11.2022 முதல் 15.11.2022 வரை சுற்றித்திரிந்த  335 மாடுகள் மாநகராட்சி சுகாதாரத்துறையினரால் பிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.6,70,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் திருவொற்றியூர் மண்டலத்தில் 20 மாடுகளும், மணலி மண்டலத்தில் 14 மாடுகளும், மாதவரம் மண்டலத்தில்  13 மாடுகளும், தண்டையார்பேட்டை மண்டலத்தில்  23 மாடுகளும், இராயபுரம் மண்டலத்தில்  15 மாடுகளும், திரு.வி.க நகர் மண்டலத்தில்  34  மாடுகளும், அம்பத்தூர் மண்டலத்தில்  36 மாடுகளும், அண்ணாநகர் மண்டலத்தில்  37 மாடுகளும், தேனாம்பேட்டை மண்டலத்தில்  27  மாடுகளும், கோடம்பாக்கம் மண்டலத்தில்  20 மாடுகளும், வளசரவாக்கம் மண்டலத்தில்  13 மாடுகளும், ஆலந்தூர் மண்டலத்தில்  17 மாடுகளும், அடையாறு மண்டலத்தில்  30 மாடுகளும், பெருங்குடி  மண்டலத்தில்  15 மாடுகளும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில்  16  மாடுகளும் பிடிக்கப்பட்டு தலா ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பிடிபட்ட மாடுகளை  மாட்டுத் தொழுவத்திலிருந்து விடுவித்து எடுத்து செல்ல மாடுகளின் உரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் பிரமாண பத்திரத்தில் மாடுகளை விடுவிக்க மண்டல நல அலுவலர், கால்நடை உதவி மருத்துவர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மாடு வளர்ப்பவர்களின் வீடு அல்லது மாடு பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று சமர்ப்பித்து தங்களுடைய மாடுகளை விடுவித்துக்கொள்ள வேண்டும்.  மூன்றாவது முறையாக ஒரு மாடு பிடிபடும் பொழுது, உரிமையாளருக்கு மாடு திரும்ப வழங்கப்படாமல் புளூ கிராஸ் சொசைட்டியிடம் ஒப்படைக்கப்படும்.

மாநகராட்சியின் சார்பில் 15 மண்டலங்களிலும் மண்டல நல அலுவலர்கள், கால்நடை உதவி மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களின் மேற்பார்வையில் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகளின் உரிமையாளர்கள், தங்கள் மாடுகளை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரிய விடாமல் முறையாக பராமரித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் சாலைகளில் சுற்றிதிரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு காவல்துறையின் மூலம் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Tags : Chennai Corporation , Nov. in areas under Chennai Corporation. From 2nd to 15th, 335 cows were caught and their owners were fined Rs.6,70,000/-
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...