பொருளாளர் பதவியில் என்னை பகடைகாயாக மட்டுமே வைத்திருந்தனர் என்னை கட்சியில் இருந்து தூக்குவதற்கு மாவட்ட தலைவர்கள் மூலம் தீர்மானம் போட வேண்டிய அவசியம் என்ன?: ரூபி மனோகரன் குற்றச்சாட்டு

சென்னை: சத்தியமூர்த்திபவனில் நடந்த மோதல் விவகாரம், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிருப்தியை தந்துள்ளதாக கட்சியினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், பேசி தீர்க்க வேண்டிய பிரச்னையை தமிழக காங்கிரஸ் தலைமை சரியாக கையாளாததால் தான் மோதல் இந்த அளவுக்கு சென்று விட்டதாக கட்சியின் மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பும் கட்சியின் தலைமைக்கு அடுத்தடுத்த புகார்களை அனுப்பி வருவதாகவும்  கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் தற்போது காங்கிரசார் மத்தியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், ரூபிமனோகரன் எம்எல்ஏ மற்றும் ரஞ்சன்குமார் ஆகியோருக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்கள் மீது என்ன மாதிரி நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற பரபரப்பு காங்கிரசார் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில், நோட்டீஸ் அனுப்பப்பட்ட ரூபி மனோகரன் வரும் 24ம்தேதி ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையில் ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் கட்சி தலைமை எடுக்கக்கூடிய முடிவுக்கு பிறகே அவரது அடுத்த கட்ட மூவ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, ரூபி மனோகரன் எம்எல்ஏ கூறியதாவது: காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் நான் ஆஜராக உள்ளேன். மாவட்ட தலைவர்கள் 62 பேர் கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர். அவர்களிடம் கையெழுத்து வாங்கியது எனக்கு சந்தேகமாக உள்ளது. என்னை நீக்குவதற்காக கையெழுத்து வாங்கியது மாதிரி தெரியவில்லை. எனக்காக என்பது ஒரு சாதாரண விஷயம். இதை நான் வேறுமாதிரி பார்க்க வேண்டியுள்ளது. அகில இந்திய தலைமைக்கு கே.எஸ்.அழகிரி கொடுக்கும் அழுத்தமாகவே நான் பார்க்கிறேன். 62 மாவட்ட தலைவர்களும் கண்ணை மூடிக் கொண்டு, அதை படிக்காமல், என்ன நடந்தது என்றே தெரியாமல் கூட்டத்துக்கு வரும் போதே அவர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கியுள்ளனர். இதை பார்க்கும் போது வேறு ஏதாவது உள்நோக்கம் இருந்து அகில இந்திய தலைமைக்கு கொடுக்கின்ற அழுத்தமாக இருக்குமோ என தோன்றுகிறது.

அது எந்த மாதிரி அழுத்தம் என்றால், ‘கட்சியை எனது கையில் வைத்திருக்கிறேன் என்று காட்டுவதற்காக, கட்சியில் உள்ள 75 மாவட்ட தலைவர்களில் அன்றைய தினம் வந்த 62 மாவட்ட தலைவர்களிடம் நான் கையெழுத்து வாங்கியிருக்கிறேன் என்றும், அவர்கள் எனது கட்டுக்கோப்பில் இருக்கிறார்கள் என்பதால், நான் என்ன வேண்டும் என்றாலும் முடிவு செய்வேன். அந்த அளவுக்கு ஸ்டெரென்த்தோட இருக்கிறேன் என்பதற்கான, அகில இந்திய தலைமைக்கு கொடுக்கும் மறைமுக எச்சரிக்கை தான் இது. என்னை கட்சியில் இருந்து தூக்குவது என்பது ஒரு சாதாரண விஷயம். இதற்காக 62 மாவட்ட தலைவர்களிடம் கையெழுத்து வாங்கி தீர்மானம் போடுவதற்கு என்ன அவசியம் இருக்கிறது. என்னை அழைத்தால் நான் பேசப் போகிறேன். தீர்மானம் போட்டால் தான் நான் பேச முடியுமா?. கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை குழு இருக்கிறது. அவர்கள் எனக்கு நோட்டீஸ் அனுப்பினால் நான் எனது விளக்கத்தை சொல்லப் போகிறேன். மாவட்ட தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றித் தான், ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரிக்க வேண்டுமா?. மாவட்ட தலைவர்களை தீர்மானம் போட வைத்தது யார்? எதற்காக போடுகிறார்கள்.

எப்படி வெளியில் இருந்து குண்டர்களை அழைத்து வந்து நெல்லையில் இருந்து வந்த கட்சிக்காரர்களை அடித்தார்களோ, அதே மாதிரி தான் மாவட்ட தலைவர்களிடம் கையெழுத்து வாங்கியதும். இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. இரண்டு ஒன்று தான். என்ன நடவடிக்கை எடுக்கிறார்களோ அதில் நான் கலந்து கொள்கிறேன். எனது தரப்பில் உள்ள நியாயத்தை சொல்வேன். கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதை நான் ஏற்றுக் ெகாள்ள தயாராக உள்ளேன். மாநில பொருளாளர் என்ற ‘பெயரை’ மட்டும் தான் நான் வைத்திருக்கிறேனே தவிர, நான் பொறுப்புக்கு வந்த முதல் இத்தனை நாளில் மாநில தலைவர் என்ன செய்தார் என்று எனக்கு கடுகளவும் தெரியாது. அது ஒரு தனிக்கதை. இப்போது அதை பற்றி சொல்ல மாட்டேன். அந்த பதவிக்கும் எனக்கு துளியளவும் சம்பந்தம் கிடையாது. பொருளாளர் பதவி மட்டுமே எனக்கு தந்திருக்கிறார்களே தவிர கட்சியின் கொடுக்கல் வாங்கல் பற்றி சிறிதளவு கூட என்னிடம் சொன்னது கிடையாது.

கணக்கு வழக்கு பற்றி என்னிடம் எப்போதும் கலந்தோலோசித்தது கிடையாது. மொத்தத்தையும் அவர் மட்டுமே தன்னிச்சையாக செய்து வருகிறார். அதுபற்றி அகில இந்திய தலைமையிடம் தெரிவித்துள்ளேன். என்னை பொருளாளர் என்ற பகடைகாயாக மட்டுமே வைத்துள்ளனர். அந்த பதவியை என்னிடம் இருந்து பறித்தால் அதுபற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. கே.எஸ்.அழகிரி தலைவராக பொறுப்பேற்றது முதல் முக்கிய நிர்வாகிகள் பலர் மற்ற கட்சிகளுக்கு சென்று விட்டனர். கட்சி வளர்ச்சி பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. காங்கிரஸ் வளர்ச்சி என்பது தமிழகத்தில் குறைந்து வருகிறது. பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: