ஆதிவாசி இளம்பெண் சாவில் திடீர் திருப்பம்; காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது: வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை: கோவையில் ஆதிவாசி இளம்பெண் சாவில் திடீர் திருப்பமாக காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் சுண்டக்காபட்டி மருதகுலம்பட்டி குண்டுவை சேர்ந்த சந்திரன் என்பவர் மகள் மேகலா பிரியா (26). இவர் கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள விசுவாசபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கோவையில் லேப் டெக்னீசியனாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து தான் தங்கியிருந்த அறைக்கு சென்றார். மறுநாள் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை.

பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சென்று பார்த்த போது மேகலா பிரியா வீட்டிற்குள் நிர்வாண கோலத்தில் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்த தகவலின் பேரில் ரத்தினபுரி போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் நிர்வாண கோலத்தில் தூக்கில் தொங்கியது பல்வேறு சந்தேகத்தை கிளப்பியது. விசாரணையில், மேகலா பிரியா ஆதிவாசிகள் இனத்தை சேர்ந்தவர் என்பதும், அவர்களது குல வழக்கப்படி ஆடைகள் இன்றி இறக்க விரும்புவதால் மேகலா பிரியா ஆடைகளை கழட்டி விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்ததும் உறுதியானது.

மேலும் தற்கொலை செய்வதற்கு முன் மேகலா பிரியா தனது செல்போனில் இருந்து வீடியோ காலில் வாலிபர் ஒருவரிடம் பேசியுள்ளார். அந்த செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட மேகலா பிரியா தங்கை உட்பட உறவினர்கள் பலரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் முக்கிய தகவல்கள் கிடைத்தன. அதன்படி, இளம்பெண் மேகலா பிரியா தற்கொலை செய்வதற்கு முன்பு பேசியது தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த தனியார் நிறுவன சூபர்வைசர் பிரசாந்த்(25) என்பது தெரியவந்தது.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதலித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று இரவு மேகலா பிரியா, பிரசாந்த்திடம் செல்போனில் பேசி உள்ளார். அப்போது பிரசாந்த் சாதியை காரணம் காட்டி மேகலா பிரியாவை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனவேதனையில் மேகலா பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து திருமணம் செய்வதாக காதலித்து ஏமாற்றிய வாலிபர் பிரசாந்தை போலீசார் கைது செய்தனர்.

அவர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், சாதிய வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காதலித்து ஏமாற்றியதால் ஆதிவாசி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: