பிச்சை எடுப்பதுபோல் நடித்து கட்சி நிர்வாகிக்கு வெட்டு; ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனி பகுதியை சேர்ந்தவர் சேஷகிரி ராவ். இவர் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் மண்டல பரிஷத் தலைவர். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது பவானியம்மன் மாலை அணிந்து பிச்சை கேட்டு ஒரு பக்தர் வந்துள்ளார். இதனையடுத்து, அவர் வீட்டில் இருந்து ஒரு தட்டில் அரிசி கொண்டுவந்து அந்த பக்தரிடம் கொடுத்தார்.  

அப்போது, திடீரென அந்த பக்தர் பிச்சை எடுப்பதற்காக கையில் வைத்திருந்த துணிக்கு அடியில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சேஷகிரி ராவ்வை சரமாரி வெட்டியுள்ளார். இதில் கையில் படுகாயமடைந்த சேஷகிரி ராவ் சத்தம் போட்டபடி வீட்டிற்குள் சென்று தப்பினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் தான் வந்த பைக்கில் தப்பிச்சென்றார்.

இந்த காட்சிகள் அனைத்தும் சேஷகிரி ராவ் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த சேஷகிரி ராவை காக்கிநாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் காக்கிநாடா போலீசார், மருத்துவமனைக்கு சென்று சேஷகிரி ராவிடம் விசாரித்தனர்.

அரசியல் முன் பகை காரணமாக அவரை கொலை செய்ய மர்மநபர் முயற்சித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இருப்பினும் தப்பிய வாலிபர் யார்? அவர் கூலிப்படையை சேர்ந்தவரா? அவரை யார் அனுப்பியது? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: