திருப்பத்தூர் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர் :  திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9 மணி வரை நீடிக்கும் பனிப்பொழிவால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வடகிழக்கு பருவ மழை காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கனமழை பெய்தது. இதனால், பனிப்பொழிவு ஓரளவு குறைவாக இருந்தது. ஆனால், கடந்த 2 நாட்களாக திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

காலை 9 மணி வரையிலும் நீடிக்கும் பனி மூட்டத்தால் எதிரே வருபவர்கள்கூட தெரியாத சூழல் நிலவுகிறது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சாலையே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் அதிகமாக இருந்ததால், விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

அதேபோல், மாலை நேரத்திலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. இதனால், குழந்தைகள், முதியோர்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். மேலும், கொட்டும் பனி, உறைய வைக்கும் குளிர் காரணமாக ஸ்வெட்டர், சால்வை போன்ற கம்பளி உடைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. இனி வரும் நாட்களில் பனிப்பொழிவும், குளிரும் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்து கொள்வது அவசியமாகிறது. இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

எனவே, திறந்த வெளியில் நடைபயிற்சி செய்வதை தவிர்த்து கொள்ளலாம். வீட்டிலேயே நடைபயிற்சியை மேற்கொள்ளலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்வெட்டர் போன்ற கம்பளி ஆடைகளை அணிவித்து அனுப்ப வேண்டும். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். எனவே, தண்ணீரை காய்ச்சி சூடாக குடிக்க வேண்டும். பல்வேறு தொற்று நோய்கள் பரவும் நிலையில் கவனமாக இருக்க வேண்டும் என்றனர்.

Related Stories: