×

தொடர் மழையால் போதிய விலை கிடைக்கவில்லை நாச்சிபாளையம் மார்க்கெட்டில் தக்காளியை ரோட்டில் கொட்டி சென்ற விவசாயிகள்-வெடிப்பு விரைவில் சரியாகும் என அதிகாரி விளக்கம்

மதுக்கரை : கோவை மாவட்டம் மதுக்கரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அவர்கள் பயிரிட்டுள்ள தக்காளிகளை மதுக்கரை அடுத்துள்ள நாச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் தினசரி காய்கறி மார்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்து செல்கின்றனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வரை இந்த மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரை விலை கிடைத்து வந்தது. இதனால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் கடந்த வாரம் மதுக்கரை சுற்றுவட்டார பகுதியில் திடீரென ஒரு வாரத்திற்கு மேல் தொடர் மழை பெய்தது. இதில் தக்காளி செடிகள் பெரிதும் பாதித்து தக்காளியில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் தக்காளி விலை அதிரடியாக குறைந்து தற்போது ஒரு கிலோ ரூ.3க்கு விலை போனது.

இதனால் விவசாயிகளுக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது தோட்டத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் செலவு அளவுக்கு கூட விலை கிடைக்கவில்லை என்பதாலும் வெடிப்பு ஏற்ப்பட்ட தக்காளியை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததாலும் வேறுவழியின்றி தாங்கள் கொண்டுவந்த தக்காளிகளை அங்குள்ள சாலை ஓரத்தில் கொட்டி சென்றனர்.
இதுகுறித்து சீரபாளையத்தை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன் என்பவர் கூறுகையில். ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்ய எங்களுக்கு ரூ.1.லட்சத்து 75 ஆயிரம் வரை செலவு ஆகிறது. ஆனால் நாங்கள் செலவு செய்யும் அளவுக்கு தற்போது விலை கிடைக்கவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேநிலை தொடர்ந்து நீடித்தால் தக்காளி விவசாயத்தை கைவிட்டு வேறு விவசாயத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை, என்று  கூறினார்.இதுகுறித்து மதுக்கரை வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சுரேஷ் கூறுகையில், ‘தொடர் மழையில் தக்காளி செடிகள் பாதித்து தக்காளியில் வெடிப்பு ஏற்பட்டதால் விலை குறைந்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு எட்டிமடை பேரூராட்சி க.க.சாவடியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் 13 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி பெட்டி ரூ.200 வரை விற்பனையாகி உள்ளது. ஆனால் நாச்சிபாளையம் மார்க்கெட்டில் விலை குறைந்துள்ளது

தக்காளியில் ஏற்பட்டுள்ள வெடிப்பு விரைவில் சரியாகி விடும் அதனால் விவசாயிகள் செடியில் இருந்து தக்காளியை பறிக்காமல் இருக்கக்கூடாது, தொடர்ந்து பறித்துவந்தால் தான் நல்ல தக்காளிகள் உற்பத்தியாகும் இதனால் விவசாயிகள் வருத்தப்படாமல் தக்காளி விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று கூறினார்.



Tags : Nachipalayam ,outbreak , Madhukarai: Farmers in Madhukarai area of Coimbatore district have grown tomatoes in an area of about 500 acres.
× RELATED கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை