×

சேலம் அஸ்தம்பட்டியில் அமைகிறது ₹3.40 கோடியில் புதிய அரசு அருங்காட்சியகம்-தொன்மை பொக்கிஷங்களை பாதுகாக்க ஏற்பாடு

சேலம் : சேலம் அஸ்தம்பட்டியில் புதிய அரசு அருங்காட்சியகம் ₹3.40 கோடியில் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இதன்மூலம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் அரசு அருங்காட்சியகம் விரிவான இடத்திற்கு இடம் பெயர இருக்கிறது.1967ம் ஆண்டில் சேலம் செவ்வாய்ப்பேட்டை சாலையில் அரசு அருங்காட்சியகம் துவக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி என்று 4மாவட்டங்களும் ஒருங்கிணைந்த பகுதியாக சேலம் விளங்கியது. இந்தவகையில் 4மாவட்டங்களிலும் கிடைத்த பல தொன்மையான பொருட்கள் இங்கு சேகரிக்கப்பட்டது. பின்னர் இட நெருக்கடி காரணமாக அழகாபுரத்தில் உள்ள கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அரசு அருங்காட்சியகம் மாற்றப்பட்டது.

தற்போது இங்கு, தொன்மையான காசுகள், டச்சு, பிரஞ்சுக்காரர் காலத்து நாணயங்கள், தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் பல்வேறு கல்வெட்டுகள், சிலைகள், கலைப்பொருட்கள், மரப்படிமங்கள், உலோகப்படிமங்கள், முதுமக்கள் தாழி, நடுக்கல், மஞ்சு விரட்டு கல்வெட்டு (ஏர்தழுவுதல்), சுடுமண் படிமங்கள், மன்னர்கள் காலத்து ஆயுதங்கள், ஓலைச்சுவடிகள், பதப்படுத்தப்பட்ட பறவைகள், விலங்குகள் உள்ளிட்டவை இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 1,940 பொருட்கள் உள்ளன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும், வரலாற்று ஆய்வாளர்களும் அவ்வப்போது இதனை பார்வையிட்டு, நமது பாரம்பரியங்களை அறிந்து வருகின்றனர்.

இப்படி பொக்கிஷமாய் இருக்கும் பழங்கால பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்க போதிய இடவசதி இல்லை. இதனால், அருங்காட்சியக வளாகத்தில் சிலைகள், கல்வெட்டுகள் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனை மிக பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்திருக்கவும், பொதுமக்களின் பார்வைக்கு அழகுப்படுத்தி காட்டிடவும் புதிய அரசு அருங்காட்சியகத்தை சேலத்தில் அமைத்திட அரசு உத்தரவிட்டது. இதன்பேரில், புதிய அரசு அருங்காட்சியகம் அமைக்க ₹3.40 கோடி நிதியை ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு, புதிய அருங்காட்சியம் கட்ட இடம் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடந்தது. தற்போது அதற்கான இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

இதன்படி, சேலம் அஸ்தம்பட்டி உழவர்சந்தைக்கு எதிரே சேலம் மெயின் தாலுகா அலுவலகம் அருகே அரசு அருங்காட்சியகத்தை கட்டிட முடிவு செய்துள்ளனர். தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தள கட்டிடமாக ₹3.40 கோடியில் பிரமாண்ட அரசு அருங்காட்சியகம் அமையவுள்ளது. இங்கு, சேலம் மண்டலத்தில் இருந்து சேகரித்து வைக்கப்பட்டுள்ள தொன்மையான பொருட்கள் அனைத்தையும் காட்சிப்படுத்தும் விதமாக அறைகள் அமைக்கப்பட இருக்கிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அருங்காட்சியகத்திற்கு வந்து தொன்மையான பொருட்களை பார்த்துச் செல்லும் விதமான ஏற்பாடுகளை இப்புதிய கட்டிடத்தில் ஏற்படுத்தவுள்ளனர்.

இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் அஸ்தம்பட்டியில் புதிய அரசு அருங்காட்சியகம் ₹3.40 கோடியில் கட்டப்படவுள்ளது. விரைவில் இப்பணி தொடங்கும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நல்ல விசாலமான அறைகள் மற்றும் பாதுகாப்பு மையமாக இந்த அருங்காட்சியகம் அமையும். அதனால் தொன்மையான பொருட்களை பாதுகாப்பாகவும், மக்கள் பார்வையிடும் வகையிலும் வைத்திருக்க முடியும். வருங்காலத்தில் இந்த அருங்காட்சியகம், தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் விளங்கும்,’’ என்றனர்.

ஆதாரமான கல்வெட்டு

தமிழகத்தில் உள்ள எந்த அருங்காட்சியகத்திலும் இல்லாத ஒரு பொக்கிஷமாக சேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஏர்தழுவுதல் கல்வெட்டு இருக்கிறது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இக்கல்வெட்டை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்தபோது, மிக முக்கிய ஆதாரமாக இக்கல்வெட்டு சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பயன்படுத்திய பொருட்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது.


Tags : Salem ,Astumbatti , Salem : A new government museum will be constructed at Salem Astampatti at a cost of ₹3.40 crore. The work will start soon.
× RELATED இறைச்சி கடைகள் செயல்பட தடை