வீடுகளை இடித்து மீண்டும் அரிசி ராஜா அட்டகாசம்-யானையை பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல கோரிக்கை

கூடலூர் : கூடலூரை அடுத்த புளியம்பாறை சுற்றுவட்ட பகுதிகளில் நடமாடும் அரிசி ராஜா யானை மீண்டும் வீடுகளை உடைத்ததால் கிராமவாசிகள் அச்சமடைந்துள்ளனர். இந்த யானையை பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு சென்று விடுமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் தேவாலா அட்டி,வாளவயல்,நாடுகாணி,பொன்னூர்,முண்டக்குன்னு,புளியம்பாறை, பாடந்துறை மூச்சு கண்டி, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக வீடுகளை இடித்து அரிசி,கோதுமை உள்ளிட்ட தானியங்களை தின்று காட்டு யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தது.  இதையடுத்து இந்த யானையை அரிசி ராஜா என இப்பகுதி மக்கள் அழைக்க துவங்கினர்.இந்த யானை இதுவரை  சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளை இடித்து தள்ளி உள்ளது.

கடந்த இரு வருடங்களுக்கு முன் தேவாலா அட்டி, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இந்த யானை வீடுகளை உடைத்த போது வனத்துறையினர் இந்த யானையை கும்கி அணிகள் வைத்து விரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தமிழக எல்லை குண்டம்புழா ஆற்றை கடந்து இந்த யானையை விரட்டிய நிலையில் சில மாதங்கள் ஊருக்குள் வராமல் இருந்தது.  மீண்டும் கடந்த வருட துவக்கத்தில் புளியம்பாறை தேவாலா அட்டி பகுதிக்கு வந்தது. யானையை அங்கிருந்து கரிய சோலை வனப்பகுதிக்கு விரட்டினர். சில மாதங்கள் வனப்பகுதிக்குள் திரிந்த யானை மீண்டும் பாடந்துறை பகுதிக்குள் புகுந்து வீடுகளை இடிக்க துவங்கியது. அங்கிருந்து தற்போது புளியம்பாறை பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது.

கடந்த 15ம் தேதிபுளியம்பாறை கோழிக்கோடு பகுதிக்கு இரவில் வந்த யானை சாஜன் என்பவரது வீட்டின் முன் நின்றுள்ளது. யானை நடமாட்டம் அறிந்து சாஜன் முன்புற கதவை திறந்து போது நேரடியாக கதவை நோக்கி ஓடிய யானை கதவை உடைத்துள்ளது. யானை வீட்டுக்குள் வருவதை அறிந்த சாஜன் உள்பக்க அறை ஒன்றில் பதுங்கி தப்பியுள்ளார். இந்த யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

மீண்டும் நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் கத்திரித்தோடு பகுதிக்கு வந்த யானை பரமாத்தா என்பவரது வீட்டை உடைத்து உள்ளே புகுந்து அரிசி, பருப்பு தானியங்களை சாப்பிட்டுள்ளது. யானை  நடமாடுவது காரணமாக வீட்டில் தனியாக மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் இருந்த பரமாத்ததா நேற்று முன்தினம் அருகில் உள்ள வேறொரு உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இதனால் அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வீடு முழுமையாக சேதம் அடைந்துள்ளது.

இப்பகுதிக்கு வந்த ஆய்வு செய்த வனத்துறையினர் இரவு நேரங்களில் யானை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் வீடுகளில் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், யானை நடமாட்டம் குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்த பொதுமக்கள் கூறுகையில்: அரிசி ராஜா என்று அழைக்கப்படும் இந்த யானை வீடுகளை உடைத்து அரிசி, தானியங்களை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த மூன்று நான்கு வருடங்களாக இந்த யானையால் பல வீடுகள் இடிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர். யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர்மேலும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பழக்கத்தை உடைய இந்த யானையை பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: