சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு ₹5 ஆயிரம் அபராதம்-வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

வேலூர் : வேலூர்-ஆற்காடு சாலை, ஆரணி சாலை, தொரப்பாடி சாலை, காட்பாடி சாலை போன்ற முக்கிய போக்குவரத்து மிகுந்த சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வருகின்றனர்.  பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிகிறது. சாலைகள் மட்டுமின்றி பொதுஇடங்களிலும் மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இந்த முக்கிய சாலைகளில் சுற்றிதிரியும் கால்நடைகளால் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இந்நிலையில் முக்கிய சாலைகளில் தினமும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

வேலூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநகராட்சி சார்பில் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநகராட்சி 1வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் நேற்று முன்தினம் காட்பாடியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது விருதம்பட்டில் சாலைகளில் சுற்றித்திரிந்த 5 மாடுகளை பிடித்து மாநகராட்சி அலுவலக வளாகத்திற்கு கொண்டு சென்றனர்.

பிடிக்கப்பட்ட 5 மாடுகளின் உரிமையாளர்களுக்கு தலா ₹5ஆயிரம் வீதம் ₹25ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராதம் செலுத்திவிட்டு மாடுகளை மீட்டு செல்லவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தவறும்பட்சத்தில் பிடிபட்ட 5 மாடுகளையும் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காட்பாடி 1வது மண்டலம் அண்ணா நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேலூர் மாநகராட்சிக்கு  பொதுமக்கள் கோரிக்கு விடுத்து வந்தனர். இந்நிலையில், வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் உத்தரவின்பேரில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் பணியாளர்கள் நேற்று காட்பாடி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்தனர்.

Related Stories: