×

முத்துப்பேட்டை ஒன்றியத்தில் எண்ணும், எழுத்தும் திட்டத்தில் அசத்தும் அரசு பள்ளிகள்-ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் பயிற்சி

முத்துப்பேட்டை : தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அதிரடியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளார். இதில் கல்வித்துறை அதிகம் கவனம் செலுத்தி பல்வேறு நடைமுறைகளை கொண்டு வந்துள்ளவர், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகிறார். அதில் குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் எண்ணும், எழுத்தும்” திட்டம் கொண்டு வந்துள்ளது. மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திட்டம் கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள்தான். இரண்டு ஆண்டு காலமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பல மாணவர்களுக்கு எழுத்துக்கள் மறந்து விட்டன. கற்றல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.1 மற்றும் 2ம் வகுப்புகள் படிக்காமலேயே ஆல்பாஸ் மூலம் 3ம் வகுப்புக்கு சென்ற மாணவர்கள் இருக்கின்றனர். எனவே 8 வயதுக்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கணிதத் திறனுடன், பிழையின்றி எழுத, படிப்பதை உறுதிசெய்யும் விதமாக ‘எண்ணும், எழுத்தும்’ திட்டத்தை செயல்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

2025ம் ஆண்டுக்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறவேண்டும் என்பதே எண்ணும் எழுத்தும் திட்டத்தின் நோக்கமாகும். எண்ணும் எழுத்தும் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1, 2, 3ம் வகுப்புகளுக்கு 2022-23ம் ஆண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு மாநில அளவிலான பயிற்சி நடைபெற்றது. இதற்காக அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரைபாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிரியர்களுக்கு பயிற்சி இதைத் தொடர்ந்து மாவட்ட மற்றும் வட்ட அளவிலான பயிற்சிகள் நடைபெற்றன. இதற்காக 1,2,3 வகுப்புகளுக்கு கற்பிக்கும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஆய்வகம் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டது.
இதுகுறித்து கல்வி அலுவலர்கள் கூறுகையில்:

எண்ணும் எழுத்தும் திட்டத்தில் பாட பொருள், கற்பித்தல் அணுகுமுறை என இரண்டையும் உற்றுநோக்க வேண்டும். குழந்தைகளை மையப்படுத் திய கற்பித்தல் அணுகுமுறைகளை முன்னெடுக் கும்போது செயல்பாடுகளின் மூலம் கற்றல், இனிமையான முறையில் கற்றல், விளையாட்டு மூலம் கற்றல் போன்றவற்றைத் தவிர்க்க முடியாது. தவிர்க்கக் கூடாது. அதற்காக அதுபோலவே இருக்கிறது என்று கூற முடியாது.

இதற்கு முன்புவரை முதல் வகுப்பில் எண்கள் மற்றும் அடிப்படைக் கணக்குகளையும் 247 தமிழ் எழுத்துகளையும், 26ஆங்கில எழுத்துகளையும் சொற்களையும் படிக்க எழுத கற்றாக வேண்டும். சில காரணங்களால் அப்படி கற்க இயலாத குழந்தைகளுக்கு அடுத்தடுத்த கல்வி ஆண்டில் அடிப்படை எழுத்துகளையும் கணக்கு களையும் கற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அந்தந்த வகுப்புக்குரிய பாடப் பொருளைக் கற்றாக வேண்டும். இப்போது எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 1,2,3 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை அரும்பு, மொட்டு, மலர் என மூன்றாகப் பிரித்துள்ளனர். முதல் வகுப்பு பாடத்திட் டம் அரும்பாகவும், 2-ம் வகுப்பு பாடத்திட்டம் அரும்பாகவும், மொட்டா கவும், 3-ம் வகுப்பு பாடத்திட்டம் அரும்பாகவும், மொட்டாகவும், மலராகவும் இருக்கிறது.

அதாவது இரண்டு, மூன்றாம் வகுப்பிலும் அடிப்படை எண்ணறிவையும் எழுத்தறிவையும் பெறாமல் விடுபட்ட குழந்தைகளுக்கும் அதைப் பெறுவதற்கான வாய்ப்பை இத்திட்டம் உறுதி செய்கிறது. அதாவது அவரவர் நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.புதிய இத்திட்டத்தில், 1,2,3 வகுப்பு படிக்கும்எந்தவொரு மாணவரும் எண்ணும் எழுத்தும் படிக்காமல் இருக்க முடியாது. மாணவர்களின் பங்கேற்பை அதிகப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக்கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முன்பு ஆசிரியர் பாடலை அவரே ஒரு மெட்டமைத்து பாடி மாணவர்களை பாடச் சொல்வார்.இனிமேல் பாடலுக்கான மெட்டை மாணவர்களே அமைத்து பாடுவதற்கு ஆசிரியர் உதவி செய்வார். மாணவர்கள் தயக்கம் இன்றி மேடை பயமின்றி நிறையப் பேசுவதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக தற்காலிகமாக சிறிய மேடை அமைத்து, டம்மி மைக்கை பிடித்து பாடுதல், பேசுதல், நடித்தல் போன்றவற்றைக் கூறலாம்.

அத்துடன் கரோனா காலத்தில் டிவி பார்ப்பது, செல்போனில் விளையாடுவது போன்ற செயல்பாடுகளால் மாணவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர் களை வகுப்பறையில் அமர வைத்து கற்றலில் ஈடுபடுத்துவது மிகக் கடினமாக இருப்பதாக ஆசிரியர்களிடமிருந்து கருத்துகள் பெறப்பட்டது. அதனால் கற்றலில் உடல் இயக்கச் செயல்பாடுகளை அதிகரித்து கவனகுவிப்புச் செயல்பாடுகளுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. குழந்தைகளின் பல தனிப்பட்ட திறன்கள் மற்றும் ஆர்வத்தைப் பயன்படுத்தி செயல்பாடுகள் வடிவமைத் துக் குறைதீர் கற்பித்தலை ஆசிரியர் மேற்கொள்ள ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று விளையாட்டு முறையில் மாணவர்கள் எளிதில் நேரங்களை அறியும் வகையில் மாணவர்களே கடிகாரம் போல வட்டமாக அமர்ந்து பெரிய முள்ளிற்கு ஒரு மாணவர் சிறிய முள்ளிற்கு ஒரு மாணவர் என மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மற்றும் மாணவர்களை கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும் கற்பிக்கப்பட்டது. இதனை பார்த்து கல்வி அதிகாரிகளே பாராட்டினார்கள். இதுபோன்று அணைத்து பள்ளியிலும் வித்தியாசமான முறையில் பாடம் நடத்தி வருகின்றனர்.

இதனை பார்வையிடு வதற்காக அடிக்கடி முத்துப்பேட்டை வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி ஆகியோர் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனார். மாணவர்களும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். இதனால் முத்துப்பேட்டை வட்டாரத்தில் உள்ள தொடக்க நிலை மற்றும் நடுநிலை பள்ளிகளாக உள்ள 84 அரசு பள்ளிகளிலும் தமிழக அரசின் சிறப்பு திட்டமான இந்த எண்ணும், எழுத்தும்” திட்டம் அசத்தும் அரசு பள்ளிகளாக காட்சியளிக்கிறது. இதற்கு பெற்றோர்கள் தரப்பிலும் பாராட்டுக்கள் பெற்றுள்ளது.

Tags : Hi- ,Muthupetta Union , Muthuppet: M.K.Stalin took charge as the Chief Minister of Tamil Nadu by announcing various schemes
× RELATED கங்கனாவின் வீடுகளை வாங்கினார் மிருணாள்