பொதுமக்களை அச்சுறுத்தி திரிந்ததால் இரண்டாவது நாளாக நாய், மாடுகள் பிடிப்பு

செய்யாறு : செய்யாறில் இரண்டாவது நாளாக போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரிந்த தெரு நாய்கள் மற்றும் மாடுகளை நேற்று நகராட்சி பணியாளர்கள் பிடித்துள்ளனர்.

செய்யாறில் நகர மன்ற தலைவர் மோகனவேல், ஆணையாளர் ரகுராமன் ஆகியோரது உத்தரவின்பேரில் கன்னியம்மன் கோவில் தெரு, பாண்டியன் தெரு, சேரன் தெரு, எல்லப்பன் நகர், ஜீவா நகர், ஆற்காடு சாலை, புதிய காஞ்சிபுரம் சாலை, லோகநாதன் தெரு, அரசு மருத்துவமனை அருகில் மற்றும் பேருந்து நிலைய பகுதிகளில் நேற்று நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மதனராசன் தலைமையில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் இருந்த 40 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டன.

பிடிக்கப்பட்ட தெரு நாய்கள் வனப்பகுதியில் விடப்பட்டது. மேலும் பிரதான சாலைகளில் சுற்றித்திரிந்த 4 பசு மாடுகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் அடைக்கப்பட்டன. கால்நடை உரிமையாளர் மாடுகளை கேட்டதால் முதல் முறை என கடும் எச்சரிக்கையுடன் அபராதம் விதிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளரிடம் மாடு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் கால்நடைகளை சாலைகளில் சுற்றி திரிய விட்டால் அபராத தொகை இரு மடங்காக வசூலிக்கப்படுவதுடன் பொது சுகாதார சட்டத்தின் படியும் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் பிரிவின்படியும் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

Related Stories: