×

டெல்டா மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்-கார்த்திகை மாதம் பிறந்ததால் பக்தி கரகோஷம்

திருச்சி : கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் நேற்று பெண்கள், சிறுவர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
தமிழகத்திலுள்ள ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் தேதியில் மாலை அணிந்து, ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்களுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்து வழிபட்டு விட்டு வருவது வழக்கம். இதனையொட்டி பக்தர்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து புதிய துளசி மாலை மற்றும் வேட்டி துண்டுகள் அணிந்து அந்தந்த பகுதியில் உள்ள விஷேசமான கோயில்களில் கூடியிருந்து விரதம் துவங்குவது வழக்கம். பின்னர் 48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க பல்வேறு வாகனங்களில் சென்று கேரளா சென்று வருவார்கள்.

திருச்சியில் கோர்ட் அருகே உள்ள ஐயப்பன் கோயில், மலைக்கோட்டை தாயுமான கோயில் மற்றும் விஷேசமான கோயில்களிலும், நாகப்பட்டினத்தில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயில், மயிலாடுதுறை மாவட்ட காவிரி ஆறு வடக்குகரை தர்மசாஸ்தா கோயில், திருவாரூர் முக்கிய விநாயகர் கோயிலில்களிலும், தஞ்சாவூரில் சுவாமிமலை முருகன் கோயில், கரூர் பசுபதீஸ்வர் கோயில், புதுக்கோட்டை சின்னப்பா நகர் ஐயப்பன் திருக்கோயிலில் ஐயப்பபக்தர்கள் மாலை அணிந்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர். இதுபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், தெண்டாயுதபாணி திருக்கோயில், சீதாபதி விநாயகர்கோயில், குமரமலைபால தெண்டாயுதபாணி கோயில் வரசக்தி விநாயகர் கோயிலில், உள்ள பூங்காநகர் ஐயப்பன் சன்னதியில் அதிகாலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

இதேபோல பெரம்பலூர் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி நடைதிறக்கப்பட்டு சரண கோஷத்துடன் பக்தர்கள் துளசி மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மேலும், பெரம்பலூர் மட்டுமன்றி சிறுவாச்சூர், எளம்பலூர், விளாமுத்தூர், நெடுவாசல், தண்ணீர் பந்தல், குரும்பலூர், அரணாரை, நொச்சியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பெண்கள், சிறுவர் உள்பட 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலைக்கு செல்ல விரதமிருந்து, வரிசையில் வந்து திரளாக கலந்துகொண்டு, குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்டு பஜனையுடன் வழிபாடு செய்தனர்.



Tags : Ayyappa ,Delta district ,Karthikai , Trichy: Ayyappa devotees who go to Sabarimala on the first day of Karthikai wore garlands and fasted yesterday.
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்