கலைமாமணி விருது எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள்?: உயர்நீதிமன்ற கிளை கேள்வி

மதுரை: கலைமாமணி விருது எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது? எவ்வாறு நபர்களை தேர்வு செய்கிறீர்கள் என அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. சாதனைகள் படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய விருது தற்போது 2 படத்தில் நடித்துவிட்டால் அவர்களுக்கு விருது வழங்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது என உயர்நீதிமன்ற கிளை வேதனை தெரிவித்துள்ளது.

2019-20ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது 2021ல் வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய விருதுகளை திரும்ப பெற கோரி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவில் 2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருதுகள் குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் கலைத்துறை செயலாளர், இயல், இசை, நாடக மன்ற தலைவர், உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற சிக்கலான நிலை நீடித்தால் இயல், இசை, நாடக மன்றத்தை கலைக்க நேரிடும் என உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். மேலும் கலை பற்றி தெரியாதவர்களுக்கு கூட கலைமாமணி விருது வழங்கப்படுகிறது எனவும் இயல், இசை, நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை எனவும் உயர்நீதிமன்ற கிளை விமர்சித்துள்ளது.

Related Stories: