×

ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு ஆன்மிகப் பயணம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலிலிருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தில் உள்ள 20 மண்டலங்களிலிருந்து 200 நபர்கள் கோயில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு தமிழ்நாட்டிலுள்ள 20 மண்டலங்களிலிருந்து 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் இராமேசுவரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் அழைத்துச் செல்லப்படவுள்ளதாகவும், தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், “இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு இவ்வாண்டில்  200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்பவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 இலட்சத்தை அரசே ஏற்கும்“. என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 10 நபர்கள் வீதம் 200 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 15.12.2022 - க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rameswaram ,Ramanathaswamy Temple ,Kasi Viswanathaswamy Temple ,Minister ,Segarbabu , Spiritual Journey from Ramanathaswamy Temple to Kasi Viswanathaswamy Temple, Rameswaram: Information by Minister Shekharbabu
× RELATED பங்குனி உத்திர விழா உற்சாகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு