×

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அதிநவீன ஏவுகணையை செலுத்தி சோதனை செய்த வடகொரியா: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் அதிகரிப்பு..!!

ஜப்பானை ஒட்டிய வான்வெளியில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தி சோதனை செய்துள்ளதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்க படைகளுடன் தென்கொரியா ராணுவம் நடத்தி வரும் தொடர் கூட்டு பயிற்சிக்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இதற்கு பதிலடியாக கொரிய தீபகற்ப வான்வெளியில் அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா தொடர்ந்து சோதித்து வருகிறது. நேற்று பாலிஸ்டிக் வகை ஏவுகணை ஒன்றை செலுத்தி ஆய்விட்ட கிம் ஜாங் உன் அரசு, ராணுவ கூட்டுப் பயிற்சியை தொடர்ந்ததால் அமெரிக்காவுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று காலை ஐ.சி.பி.எம். எனப்படும் அணு ஆயுதங்களை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அதிநவீன ஏவுகணையை ஜப்பான் வான்வெளியை ஒட்டிய பகுதியில் வடகொரியா ஏவியது. இதையடுத்து ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள விமான தலத்தில், முகாமிட்டுள்ள அமெரிக்க வீரர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ராணுவ உயர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு நிலவியது. இருப்பினும் ஏவுகணை நிலப்பகுதியை கடந்து கடலில் விழுந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவின் அடுத்தடுத்த ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.


Tags : North Korea ,Korean Peninsula , Sophisticated missile, test, North Korea, war tension
× RELATED கொரிய தீபகற்பத்தில் பதற்றம்: வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனை