சிறுமியை மிரட்டி பலாத்காரம் கோயில் பூசாரிக்கு 13 ஆண்டு சிறை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கோயில் பூசாரிக்கு 13 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை துறைமுகம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (62). கோயில் பூசாரி. இவர், அதே பகுதியில் வசிக்கும் தம்பதியரின் 13 வயது சிறுமியை, கோயிலில் உள்ள சிறு பணிகளில் ஈடுபடுத்தி உள்ளார். அதற்காக, அவ்வப்போது சிறுமிக்கு பிடித்த சாக்லெட், பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளார். வழக்கம்போல்  கோயில் வேலைகளை பார்ப்பதற்காக 2016 டிசம்பர் 12ம் தேதி கோயிலுக்கு வந்த சிறுமியை நடராஜன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும், இதை வெளியில் யாரிடமும் கூறினால், கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், அந்த சிறுமி வெளியில் யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதை பயன்படுத்தி, அந்த சிறுமியை 2 ஆண்டுகளாக நடராஜன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடராஜனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால், இதுபற்றி அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து துறைமுகம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பூசாரி நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் நடராஜனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் மூன்று ஆண்டு சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தமிழக அரசு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

பாலியல் தொல்லை

செங்கல்பட்டு  மாவட்டம் செய்யூரை சேர்ந்த ஆங்கிலோ- இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்  ரோஸி (28).  ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவரது உறவினர் கேரி க்ளார்க் (51). கடந்த 6ம் தேதி வில்லிவாக்கம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற குடும்ப  நிகழ்ச்சியில் ரோஸி கலந்து கொண்டார். அப்போது, அங்கு  இருந்த கேரி க்ளார்  ரோஸியிடம் தனியாக பேச வேண்டும் என கூறி, தனி அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, ரோஸிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.   அதிர்ச்சியடைந்த ரோஸி இதுகுறித்து  வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார்  கேரி க்ளார்க் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ்  வழக்கு  பதிவு செய்து நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: