சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது கழிப்பறைகள் மூலம் வருவாயை பெருக்க திட்டம்: அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொது கழிப்பறைகள் மூலம் வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் பொது இடங்களில் மக்கள் இயற்கை உபாதைகளை கழிப்பதை தவிர்க்கும் வகையில், மாநகராட்சி சார்பில் ஆங்காங்கே பொது கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலான இடங்களில் உள்ள பொது கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படாததால், சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. இதனால், இந்த கழிப்பறைளை பொதுமக்கள் உபயோகப்படுத்துவதற்கு சிரமப்படுகின்றனர்.

சென்னையில் தற்போது 943 இடங்களில் பொது கழிப்பறைகளை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்நிலையில், மக்களின் தேவையை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேலும் 366 கழிப்பறைகளை கட்டி முடிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும்,  தரமான பராமரிப்பு மற்றும் பராமரிப்பு இல்லாமல் உள்ள கழிப்பறைகள், திறன் விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும்  குறைபாடுகளை நிவர்த்தி செய்ய,  சென்னை மாநகராட்சி கடந்த ஜூலை மாதம் ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டமானது, நகரில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட 9 பொது மற்றும் சமூக கழிப்பறைகளின் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை 3 வகையான ஒப்பந்ததாரர்களுக்கு (மகளிர் சுயஉதவி குழுக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சமூகம் சார்ந்த தொழில்முனைவோர்) ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டது. இந்த முன்னோட்ட திட்டம் பொதுமக்களின் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

குறிப்பாக 13, 14 ஆகிய மண்டலங்களில் அமைந்துள்ள இந்த கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்பட்டு, சுகாதாரமாக உள்ளதால், பொதுமக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது. நாளொன்றுக்கு பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். புதுப்பித்தலின் ஒரு பகுதியாக, உடைந்த கதவுகள், பைப்லைன் மற்றும் குழாய்களை சென்னை மாநகராட்சி சரி செய்துள்ளது. இன்னும் பல பொது கழிப்பறைகளை சீர் செய்து வருகின்றனர்.

 புதிதாக வர்ணம் பூசப்பட்ட கழிவறைகளில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கவும், சிசிடிவி கேமரா மூலம் அந்த வளாகத்தை கண்காணிப்புக்காகவும் டிஜிட்டல் பின்னூட்ட சாதனம் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் கழிப்பறைகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான கழிப்பறைகள் நிலையான உதவி வழிமுறைகளைக் கொண்டுள்ளன. இதுவும் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி கூறியதாவது: சென்னை மாநகராட்சியின் இந்த முன்னோட்ட திட்டத்தின் கீழ் கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டு, முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. தங்கள் பங்கிற்கு,  ஒப்பந்ததாரர்கள் கழிப்பறைகளை  16-24 மணி நேரமும் திறந்திருப்பதையும், பெரும்பாலான மணி நேரங்களுக்கு ஒரு துப்புரவு பணியாளர் மற்றும் மேற்பார்வையாளர் இருப்பதையும் உறுதி செய்கின்றனர்.

இந்த 3 ஒப்பந்ததாரர்களின் நன்மை, தீமைகள் மற்றும் அவர்களின் வணிக மாதிரிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்காக கழிப்பறைகளின் பராமரிப்பை கையாள வசதி மேலாண்மை வழங்குநர்களை கையாள்வதே யோசனையாகும். அவை செயல்படும் எல்லா நேரங்களிலும் மிகவும் சுத்தமாக இருக்கும். பொது கழிவறைகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதால் அதை மேம்படுத்தி வருகிறோம். கடந்த  ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை கிண்டி பேருந்து நிலைய பகுதியில் உள்ள கழிப்பறைகளை தினசரி பயன்படுத்துவோரின் சராசரி எண்ணிக்கை 200ஆக அதிகரித்தது. திருவான்மியூர் பஸ் நிலையத்திலும் பயனர்களின் எண்ணிக்கை 300ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னை மாநகராட்சி வருவாயை அதிகரிப்பதற்கும், செலவினங்களை மேம்படுத்துவதற்கும் வழிகளை ஆராய்ந்து வருகிறது. மண்டலம் 5 மற்றும் 6க்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளில்  சுவர்கள் மற்றும் அதன் பகுதிகளில்   விளம்பரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலங்களை மிகவும் போட்டித்தன்மையடைய செய்ய சிறிய தொகைகளை கூட சேர்க்கிறோம். முன்னோடி திட்டத்தில் கூட, மாநகராட்சி நிர்வாக செலவுகளுக்கு கணக்கு காட்ட வேண்டும். நிர்வாகம் தற்போது பிரிக்கப்பட்ட நிலையில் (பல்வேறு துறைகளின் ஈடுபாட்டுடன்), எவ்வளவு செலவழிக்கப்படுகிறது என்பதை மதிப்பிடுவது கடினம்.

அவுட்சோர்சிங் பராமரிப்பு என்பது அரசுக்கு செலவை குறைக்கும். அங்கு கட்டணமானது சேவை வழங்கலுடன் இணைக்கப்படும், இதற்கு அரசாங்கம் கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டும். ஒரு இடத்தில் செப்டிக் டேங்க் அமைப்பது மற்ற இடங்களில் கால்வாய்களுடன் இணைப்பது  போன்ற பல சவால்களை எதிர்கொள்ளவும் உள்ளது. இத்தகைய கற்றல், கைவசம் இருப்பதால் சென்னை மாநகராட்சியானது இந்த திட்டத்தை நகரமெங்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணம் வசூலித்தால் கைது

மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் பொது கழிப்பிடங்களில் பொதுமக்களுக்கு எந்த கட்டணமும் இன்றி சேவையாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. எனவே, மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் இல்லா பொதுக்கழிப்பிடம் என பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பவர்களின் மீது போலீசில் புகார் அளித்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூடுதலாக 366 இடங்களில்

சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 943 இடங்களில் 7 ஆயிரத்து 590 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இவற்றை பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. சென்னையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.36 கோடி மதிப்பில் 366 இடங்களில் சிதலமடைந்த மற்றும் பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த திட்ட பணியின் கீழ் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்களும், 620 இருக்கைகள் கொண்ட சிறுநீர் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: