பிரதிநிதிகள் சபையை கைப்பற்றினார் டிரம்ப்: பைடனின் திட்டங்களை முடக்க திட்டம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தலில் பிரதிநிதிகள் சபையை குடியரசு கட்சி கைப்பற்றி உள்ளது. அமெரிக்காவில் கடந்த 8ம் தேதி 35 செனட் எம்பி.க்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 100 சீட்களில் ஜனநாயக கட்சி 50 இடங்களை கைப்பற்றி உள்ளது. குடியரசு கட்சி 49 இடங்களை பிடித்துள்ளது. ஜார்ஜியாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அடுத்த மாதம் 6ம் தேதி அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் செனட் எம்பி.க்கள் அடுத்தாண்டு ஜனவரி முதல், 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்.

இதனிடையே, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்தலில் மொத்தமுள்ள 435 தொகுதிகளில் குடியரசு கட்சி 218 தொகுதிகளில் வென்று பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது. கலிபோர்னியாவில் தற்போது எம்பி.யாக உள்ள குடியரசுக் கட்சியை சேர்ந்த மைக் கார்சியா மீண்டும் வெற்றி பெற்றதால் அக்கட்சியின் எம்பி.க்கள் எண்ணிக்கை 217ல் இருந்து 218 ஆக உயர்ந்து, சிறியளவில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதனால், பிரதிநிதிகள் சபையில் அதிபர் பைடன் கொண்டு வரும் புதிய திட்டங்களை முடக்க குடியரசுக் கட்சி தயாராகி வருகிறது. ஆளும் ஜனநாயக கட்சி, 211 இடங்களை மட்டுமே பெற்று பிரதிநிதிகள் சபையை டிரம்பின் குடியரசுக் கட்சியிடம் பறிகொடுத்தது.

இன்னும் 6 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படாததால், எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது மட்டும் உறுதியாகவில்லை. இந்நிலையில், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகராக உள்ள ஜனநாயக கட்சியின் நான்சி பெலோசிக்கு பதிலாக, குடியரசு கட்சியின் கெவின் மெகார்தியை அக்கட்சியின் எம்பி.க்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.

Related Stories: