ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன்: சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு

திருமலை: ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு, கர்னூல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். பட்டிகொண்டாவில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: அரசியலில் நான் மூத்த தலைவர்.

எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் யாரும் என்னை அவமதிக்க துணியவில்லை. ஆனால், முதல்வர் ஜெகன் மோகன் ஆட்சிக்கு வந்ததும் சட்டசபைக்கு சென்றால் என்னை அவமானப்படுத்தினர். என்னை மட்டுமின்றி என் மனைவியையும் அவமானப்படுத்தினர். எனவே, கவுரவமுள்ள சட்டப்பேரவையை கவுரவமற்ற சட்டப்பேரவையாக மாற்றியதால் அன்றே முடிவு செய்து கூறினேன்.

மீண்டும் கள அளவில் வெற்றி பெற்று சட்டசபையில் மீண்டும் முதல்வராக வந்து கவுரவ சட்டபேரவையாக மாற்றுவேன். இல்லையெனில், சட்டசபைக்கு வரமாட்டோம் என கூறினேன். எனவே, நான் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்றால், அரசியலில் இருக்க வேண்டும் என்றால், மாநிலத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றால், வருகிற 2024ம் ஆண்டில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெறாமல் என்னால் இவற்றை செய்ய முடியாது. அந்த ேதர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகுவேன்.

எனக்கு வயது ஆகி விட்டது என கூறுகின்றனர். எனக்கும் பிரதமர் மோடிக்கும் ஒரே வயதுதான். அமெரிக்க அதிபர் பைடனுக்கும் 79 வயதாகிறது. எனக்கு வயது முதிர்வு ஏற்பட்டாலும் மிக இளமையாக, உற்சாகத்துடன் உள்ளேன். எனக்கு தீய பழக்கங்கள் கிடையாது. எனது மனமும், உள்ளமும் முழு ஆரோக்கியத்துடன் இளமையுடன் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: