`லிவ்-இன்’ வாழ்க்கையால் குற்றங்கள் பெருகுகின்றன: ஒன்றிய அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: ``லிவ் - இன் ரிலேஷன்ஷிப்’ உறவுகளினால் நாட்டில் குற்றங்கள் பெருகி வருகின்றன,’ என்று ஒன்றிய அமைச்சர் கவுஷால் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் வாடகைக்கு வீடு எடுத்து `லிவ்-இன்` உறவில் வசித்து வந்த மும்பையை சேர்ந்த அப்தாப் பூனேவாலா தனது காதலி ஷ்ரத்தாவை கொன்று,  உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிய சம்பவம் நாட்டில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், ஒன்றிய வீடு மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை இணையமைச்சர் கவுஷால் கிஷோர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ``பல ஆண்டுகளாக தங்களை வளர்த்து ஆளாக்கும் பெற்றோரை விட்டு பிரிந்து செல்லும் பெண்களே, இத்தகைய கொலைகளுக்கு காரணம். லிவ்-இன் உறவுமுறையால் சமூகத்தில் குற்றங்கள் பெருகுகின்றன. தங்களை வெளிப்படையானவர்களாக, எதிர்காலம் குறித்த முடிவெடுக்கும் திறமை உடையவராக காட்டி கொள்ளும் படித்த பெண்களே `லிவ்-இன்` உறவுகளில் சிக்கி கொள்கிறார்கள்.

இப்படியான உறவில் ஈடுபடுபவர்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும். கல்வியறிவு பெற்ற பெண்கள் இதுபோன்ற உறவுகளில் ஈடுபடக் கூடாது. பெற்றோர் விரும்பவில்லை என்றால், பதிவு திருமணம் செய்து கொண்டு `லிவ்-இன்’ உறவில் வாழலாம்,’ என்று தெரிவித்தார். அமைச்சரின் பெண்கள் குறித்த இந்த கருத்துக்கு சிவசேனா எம்பி சதுர்வேதி தனது டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: